Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10, 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு

செப்டம்பர் 27, 2020 12:07

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார். இவரும் 11ம் வகுப்பு படித்து வருகிறார். 

அந்த மாநிலத்தின் சட்டசபை வளாகத்தில் வைத்து மாணவர்களுக்கு கார் பரிசாக அளித்துப் பேசினார். அப்போது அவருடன் மாநில சட்டசபை சபாநாயகர் ரபிந்திர நாத் மஹோதா உடன் இருந்தார். கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹோதா பேசியதாவது:

நான் முன்பு கொடுத்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றி உள்ளேன். அடுத்த ஆண்டும் மாநிலத்தில் 10, 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இது மாணவர்களை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெறுவதற்கு ஊக்குவிக்கும். நானும் அடுத்த ஆண்டு பரிசு பெறும் மாணவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இவர் தனது சட்டசபை தொகுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக லேப்டாப் பரிசாக வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மோட்டார் பைக் பரிசாக வழங்கி இருந்தார். இத்துடன் தனது தொகுதியான போகாராவில் 75 சதவீத மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்று இருந்தவர்களுக்கு 340 சைக்கிள்கள் வழங்கி இருந்தார். 

அந்த மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று இருந்த மணிஷ் குமார் கத்தியார் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று இருந்த அமித் குமார் இருவருக்கு ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. இது அவர்களை மேலும் நன்றாக படிப்பதற்கு ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

போகாரா தொகுதியில் இருக்கும் நவாதி தேவி மஹோதா பள்ளியில் சேர்ந்து மஹோதாவும் படித்து வருகிறார். கல்வி அமைச்சராக இருப்பவர் தகுதி குறைவாக இருக்கக் கூடாது என்பதால் மேலும் படிப்பதாக தெரிவித்துள்ளார். இவர்தான் இந்தப் பள்ளியை போகாரா தொகுதியில் 2005ம் ஆண்டில் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்