Saturday, 5th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா பொதுமக்களால் வெறுக்கப்பட்டவர்: அமைச்சர் கே.சி.வீரமணி பேசுவது உண்மையா?

செப்டம்பர் 27, 2020 12:10

சென்னை: சசிகலாவை எதிர்த்துதான் கட்சியும் ஆட்சியும் நடைபெறுகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர். நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்,'' என்று வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். தமிழக சட்டசபைத்தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க .தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க நினைத்து மக்கள் நல பணிகளை செய்து வருகிறது. கொரோனா காலமாக இருந்தாலும் தேர்தலை மனதில் வைத்து நலத்திட்ட உதவிகளை தொகுதிவாரியாக தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களும், அமைச்சர்களும் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் என்ற இரட்டை தலைமை அ.தி.மு.க..விற்கு உள்ள நிலையில் ஒற்றை தலைமையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்த பின்னர் அ.தி.மு.க..வில் நிறைய மாற்றங்கள் நடைபெறும் என்றும் பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டுதான் சிறையில் இருந்து விடுதலையாவார் என்று கூறப்படும் நிலையில் அவர், விரைவில் விடுதலையாவார் என்று சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். சில அமைச்சர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சிலர் சசிகலாவை கடுமையாக எதிர்க்கின்றனர். அ.தி..மு.க.வின் செயற்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று வேலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் 200 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை,பேட்டரியில் இயங்கும் நாற்காலி, காது கேளாதவர்களுக்கான நாற்காலிகள் என 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை அமைச்சர் வீரமணி வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் சசிகலா விடுதலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி வீரமணி, சசிகலாவை எதிர்த்துதான் கட்சியும் ஆட்சியும் நடைபெறுவதாக கூறினார். 

அவர்கள் தேவையில்லாதவர்கள், சசிகலா மக்களால் வெறுக்கப்படுகிறவர் என்ற நிலையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. ஏதாவது செய்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காக செய்தியாளர்கள் சசிகலாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்.
இவ்வாறு  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். 

பெங்ககளூரு சிறையில் இருந்து சசசிலா விடுதலையாக வேண்டடி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டெல்லி வரை சென்று பல்வேறு சட்ட வல்லலுர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதே வேளையில் பா.ஜ..க. முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்ததாக தெரிகிறது. இந்நிலையில் அ.தி.மு.க.வில் தனது அதிகார பலத்தை சசிகலா ஏற்படுத்துவார்கள் என்று முதல்வர் ஈ.பி.எஸ். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸூக்கு தெரியும் என்ற நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்த கருத்து வேடிக்கையாக உள்ளதாக அ.ம.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்