Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது 

செப்டம்பர் 29, 2020 08:24

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது பற்றி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும்,'  என்று, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பிமுனுசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு..க.வில் யார் முதல்வர் வேட்பாளர், என்பது பற்றி நீண்ட நாட்களாக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம், தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யாருக்கு முதல்வர் பதவி வழங்க அ.தி.மு.க. முடிவெடுக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் வேட்பாளர் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி. 

அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது பற்றி வரும் அக்டோபர் 7ம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தலைமை கழகத்தில் வைத்து அறிவிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

கூட்டம் 5 மணி நேரம் நடந்தாலும், முழுமையாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எனவே கட்சி தலைமை ஒருவரிடமும், முதல்வர் பதவிக்கான போட்டி மற்ற ஒருவரிடமும் வழங்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை. யாரிடம் எந்த பணி என்பதை ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் ஆலோசித்து 7ம் தேதி அறிவிக்க உள்ளனர் என்று அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தலைப்புச்செய்திகள்