Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1949ம் ஆண்டு ராமர் சிலை வைக்கப்பட்டது முதல் 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வரை

செப்டம்பர் 30, 2020 11:26

கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோமா?

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கி.பி.16-ம் நூற்றாண்டு பாபர் மசூதியை இந்துத்துவா கரசேவகர்கள் இடித்து தரைமட்டமாக்கி மதச்சார்பின்மையை தகர்த்தனர். பாபர் மசூதி இடிப்பு என்பது அரை நூற்றாண்டுகால திட்டமிட்ட நகர்வுகளால் அரங்கேற்றப்பட்டது. கி.பி.1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் கி.பி. 1853-ல் பாபர் மசூதி பகுதியில் முதன் முதலாக இந்து- முஸ்லிம்கள் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனால் 1859-ல் இந்துக்களும் முஸ்லிம்களும் அப்பகுதியில் தனித்தனியாக வழிபாடு நடத்த வேலி அமைத்தனர் ஆங்கிலேய அதிகாரிகள்.

இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் 1949-ல்தான் மீண்டும் பிரச்சனை வெடித்தது. மசூதியில் ராமர் சிலைகள் 1949-ல் பிரதமராக நேருவும் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக கோவிந்த் வல்லபபந்த் பதவி வகித்தனர். அப்போது அயோத்தி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பாபா ராகவ் தாஸ் என்ற இந்து துறவி வெற்றி எம்.எல்.ஏ. ஆனார். இவர்தான் பாபர் மசூதி அருகே கோவில் கட்ட முதன் முதலில் அனுமதி கோரியவர்.

அப்போதைய உத்தரப்பிரதேச அரசு இந்துக்களின் கோவில் கட்டுமான கோரிக்கைக்கு மட்டும் சாதகமாக நடந்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் பைசாபாத் ஆட்சியராக இருந்த ஜனசங்கத்தின் உறுப்பினரான கே.கே.நாயர்தான். இவர்களது சாதகமான போக்கால் 1949-ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் மசூதிக்குள் சட்டவிரோதமாக சுவர் ஏறி குதித்து ராமர்-ஜானகி சிலைகளை வைத்தனர். அத்துடன் இல்லாமல் ராமர் பிறந்த பூமிக்கு திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்தனர். 

சிலைகளை வைத்தனர். அத்துடன் இல்லாமல் ராமர் பிறந்த பூமிக்கு திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்தனர். வேடிக்கை பார்த்த அப்போதைய உத்தரப்பிரதேச மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த சிலைகளை அகற்றவும் இல்லை. பிரதமராக இருந்த நேரு கண்டித்த போதும்கூட உத்தரப்பிரதேச அரசு நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல்விட்டது. அதேநேரத்தில் ராமர்- ஜானகி சிலைகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்ததை ஆட்சியராக இருந்த நாயர் நியாயப்படுத்தவும் செய்தார். இந்த இடத்தில் இருந்துதான் பாபர் மசூதி இடிப்புக்கான அத்தியாயமும் தொடங்கியது என்பது அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

கடந்த 1949-ம் ஆண்டு முதல் 1980களின் மத்தியில் வரை இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு- ராமர் கோவில் கட்டுமானம் ஒரு பிரதான பிரச்சனையாக இருந்தது இல்லை. ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், விஸ்வஹிந்து பரிஷத்துகள் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த நிலையிலும் இந்த பிரச்சனையை மக்களிடத்தில் அப்படி ஒன்றும் சென்றும் சேர்த்துவிடவும் இல்லை. 1984-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் ராமர் கோவில் கட்டுமானத்துக்காக முதலாவது ரத யாத்திரை நடந்தது. பீகாரில் இந்து புறப்பட்ட இந்த ரதயாத்திரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு வந்து மசூதியின் பூட்டை உடைத்தது. பாபர் மசூதி இடிப்புக்கான 2-வது அத்தியாயம் இது.

அத்வானி விஸ்வரூபம் 1984-ல் இந்த ரதயாத்திரை டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ரதயாத்திரை கைவிடப்பட்டது. அப்போதுதான் பஜ்ரங்தள் போன்றவை வெளியே வந்தன. இதன்பின்னரே ராமர் கோவில் இயக்கமும் வலிமையடைய தொடங்கியது. அப்போது பாரதிய ஜனதா கட்சியாக உருமாறியிருந்த ஜனசங்கம், ராமர் கோவில் இயக்கத்தை கையில் எடுத்தது. குறிப்பாக பா.ஜ.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, ராமர் கோவில் இயக்கத்தின் கர்த்தாகவாக திகழ்ந்தார்.

1986-ல் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி பதவி வகித்த போது ஷாபானு வழக்கு பெரும் பரபரப்பாக இருந்தது. ஷாபானுவுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பு. இதற்காக முஸ்லிம்களிம் நன்மதிப்பை பெற உச்சநீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய சட்டம் கொண்டு வந்தார் ராஜீவ். ஆனால் உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை. அப்போது முஸ்லிம் ஆதரவாளராக தம்மை முத்திரை குத்துவதில் இருந்து தப்பிக்க ராமர் கோவில் பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்தார் ராஜீவ் என்கிறது வரலாறு.

கடந்த 37 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த மசூதியின் பூட்டை திறக்க திடீரென உத்தரவிடப்பட பெரும் சர்ச்சையானது. இந்த உத்தரவின் சூத்திரதாரியே ராஜீவ்தான் என்கிறது வரலாற்றுப் பக்கங்கள். இதனால் பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் இந்தியா முழுவது பேசு பொருளானது. முஸ்லிம்கள் தரப்பில் பாபர் மசூதி போராட்டக் குழுவும் உருவானது. கடந்த 1989 லோக்சபா தேர்தல் காலத்தில் பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் மையப் பொருளானது. ராமஜன்ம பூமிக்கான இயக்கத்தை பா.ஜ.க. முழுவீச்சில் இந்துக்களிடையே கொண்டு சென்றது. இதனால் இந்திய சமூக அமைப்பில் இந்துக்கள்- முஸ்லிம்களிடையே பிளவு அதிகமானது. இது இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு பெரும் வெற்றியாகவும் அமைந்தது.

அப்போதுதான் இந்தியாவின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் உச்சத்தை எட்டியது. 1989 லோக்சபா தேர்தலில் வி.பி.சிங். பிரதமரானார். அப்போது வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க.வும் ஆதரவு தந்தது. இதில் இருந்து பாபர் மசூதி இடிப்பு வரலாற்றின் 3-வது மற்றும் இறுதி அத்தியாயம் தொடங்கிவிட்டது. அத்வானி ரதயாத்திரை அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் வி.பி.சிங்குக்கு பாரதிய ஜனதாவின் தலைவரான அத்வானி நெருக்கடி கொடுத்தார். அதேகால கட்டத்தில் 1990-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தினார் பிரதமர் வி.பி.சிங். இதை கொள்கை ரீதியாக பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது.

நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தூண்டிவிடப்பட்டு வன்முறை களமாக தேசம் கனன்று கொண்டிருந்தது. இந்த அக்னிச் சூழலில்தான் கடந்த 1990 செப்டம்பர் 25-ல் ராமர் கோவில் இயக்கத்துக்கான ரத யாத்திரையை அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து தொடங்கினார். அப்போது அத்வானியின் வலதுகரங்களில் ஒருவராக இருந்தவர் இன்றைய தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தூண்டிவிடப்பட்டு வன்முறை களமாக தேசம் கனன்று கொண்டிருந்தது. இந்த அக்னிச் சூழலில்தான் 1990 செப்டம்பர் 25-ல் ராமர் கோவில் இயக்கத்துக்கான ரத யாத்திரையை அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து தொடங்கினார். அப்போது அத்வானியின் வலதுகரங்களில் ஒருவராக இருந்தவர் இன்றைய தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி.

துப்பாக்கிச் சூடு நடத்திய முலாயம்சிங் அத்வானியின் ரதயாத்திரை என்பது அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டதாக இருந்தது. அப்போது பீகாரில் லாலுவும், உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவும் முதல்வராக இருந்தனர். அத்வானியை பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி மீது கை வைத்து இடிக்க முயன்றவர்களை துப்பாக்கிச் சூடுகள் நடத்தி ஒடுக்கினார் முலாயம்சிங் யாதவ். இந்த துப்பாக்கிச் சூடுகளில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ராமர் கோவில் இயக்கத்தினர் ஆவேசம் அதிகரித்தது. பின்னர் வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது. 

இடிக்கப்பட்டது பாபர் மசூதி இந்த ஆவேசத்தின் உச்சத்தை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தேசம் அனுபவித்தது. அன்று பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தார் கல்யாண்சிங். இன்றைய பா.ஜ.க.வின் முதியோர் குழுவில் இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி என எல்லோரும் அயோத்தியை நோக்கி கரசேவைக்கு புறப்பட்டனர்.
இந்த கரசேவையின் இறுதியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் மதச்சார்பின்மையின் ஜனநாயகத்தின் அடையாளமாக பேசப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த கறுப்பு அத்தியாத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை மத மோதல்கள், தொடர் குண்டுவெடிப்புகள் காவு வாங்கின.

இன்னமும் இந்திய பூமி பதற்றத்தில் இருப்பதற்கு 1992 டிசம்பர் 6-ல் நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு எனும் ஜனநாயகப் படுகொலையே காரணம். இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில்தான் அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அதேபோல் அடையாளம் தெரியாத பல்லாழயிரக்கானோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்