Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டு வருமா சிஎஸ்கே ?- பஞ்சாப் உடன் நாளை மோதல்

அக்டோபர் 03, 2020 11:53

தூபய்: சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெறுவதால் பழைய ஹிஸ்டரி தேவையில்லை. இந்த சீசனில் எப்படி விளையாடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து, ஒரு வாரம் ஓய்வுக்குப்பின் சென்னை அணி நேற்று களம் இறங்கியது. ஓய்வை நன்றாக பயன்டுத்தியுள்ளோம். சரியான கலவை அணியை களம் இறக்குவோம். அம்பதி ராயுடு, பிராவோ களம் இறங்குகிறார்கள் என்றெல்தாம் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் மார்தட்டினார்.

நேற்றைய ஆட்டத்தில் மூன்று மாற்றங்கள், அம்பதி ராயுடு, பிராவோ வரவு, ஒரு வாரம் திட்டமிடுதல் என எதற்கும்  பயனில்லாமல் போனது. மீண்டும் பேட்டிங் சொதப்பல். இதனால் ஹாட்ரிக் தோல்வி. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 4-ல் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இரண்டு அணிகளும் ஒரே நிலையில்தான் உள்ளது. இதனால் இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்புக்கு வேட்டு வைத்துவிடும்.

துபாய் ஆடுகளங்கள் ஒரு ட்ரிக்கானது. இதில் சரியான திட்டமிடுதல் உடன் சென்றால்தான் சாதிக்க முடியும்.  பொதுவாக இந்தியாவில் 8 மணிக்கு போட்டி தொடங்கும்போது முதல் பாதி நேரம் ஆட்டம் முடிய 9.30 மணி ஆகும். அதன்பின் 9.45 முதல் 10 மணிக்குள் 2-வது இன்னிங்ஸ் தொடங்கும். 9.30 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் முதல் பந்தில் இருந்தே பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் சேஸிங் செய்வது எளிது.

இந்தக் கணக்கில்தான் டாஸ் வென்ற அணிகளில் எல்லாம் பந்து வீச்சை தேர்வு செய்து மண்ணைக் கவ்வின. தற்போது துபாயில் அங்குள்ள நேரப்படி 6 மணிக்கு தொடங்கும். இதனால் 2-வது இன்னிங்ஸ் 15-வது ஓவருக்குப் பின்தான் பனி அதிகமாக இருக்கும். அப்போதுதான் பந்து வீச்சளர்கள் திணறுவார்கள். அந்த நேரத்தை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுப்பந்து ஸ்விங்கிற்கு அதிகமாக சப்போர்ட் செய்வதால் அதற்கு முன் பவர்பிளேயில் 40 முதல் 10 ரன்கள் அடித்தாலும், விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 

மைதானம் மிகப்பெரியது என்பதல் மிடில் ஓவர்களில் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஒன்றிரண்டு ரன்கள், அவ்வப்போது பவுண்டரிகள் விரட்டி ரன்கள் சேர்க்க வேண்டும். 14-வது ஓவருக்கப்பின் வாணவேடிக்கை நிகழ்த்த வேண்டும். இதுதான் துபாய் மைதானத்தில் சூத்திரம். இதை மனதில் வைத்து விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் விஜய் நீக்கப்பட்டார். வாட்சனுடன் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்கினார். வாட்சன் வழக்கம்போம் போல் சொதப்ப பிரயோஜனம் இல்லாமல் போனது. 

காயத்தில் இருந்து மீண்டு வந்த ராயுடுவும் ஏமாற்றம். நடராஜன் பந்தில் 8 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். டு பிளிஸ்சிஸ் அணியை வழி நடத்திச் செல்ல முயன்றபோது, கேதர் ஜாதவ் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட டு பிளிஸ்சிஸ் ரன்அவுட். பவர் பிளேயில் வெறும் 36 ரன்களுக்குள் 3 முக்கியமான விக்கெட்டை இழந்தது. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் ஏறக்குறைய முடிந்து விட்டது.

இதுவரை அணியில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கும் கேஜர் ஜாதவ் விளையாடுவார் என்று பார்த்தால் அவரும் 3 ரன்னில் நடையை கட்டினா்.

இதனால் முழு பொறுப்பும் டோனி மீது விழுந்தது. பழைய டோனியாக இருந்தால் துவம்சம் செய்திருப்பார். அவராலும் பந்தை அடிக்கடி மைதானத்திற்கு வெளியே அனுப்ப முடியாத நிலைய ஏற்பட்டது. கடைசி வரை களத்தில் நின்றும் ரன்கள் அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை. சுழற்பந்து வீச்சு. டோனி வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதல் பந்தில் வைடு உடன் நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் 6 பந்தில் 23 ரன்களே தேவைப்பட்டது. 4 பந்தில் 3 சிக்சர்கள் அடித்தெல்லாம் அணியை வெற்றி பெற வைத்த டோனியால் இது முடியாதா? என ரசிகர்கள் நம்பிக்கை  வைத்திருந்தனர். ஐந்து பந்தில் நான்கு பந்தை சந்தித்த டோனி ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 
இதில் இருந்து டோனி இன்னும் சரியான ஃபார்முக்கு வரவில்லையா? அல்லது அவரால் முடியவில்லையா? என்ற கேள்வி எழத் தொடங்கிவிட்டது.

ஒரே ஓவரில் 25 ரன்கள் அடிக்கக்கூடிய ஹிட்டர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பலவீனம். இதுவரை டோனி இந்த பணியைச் செய்தார். வரும் போட்டிகளிலும் அவரால் முடியவில்லை என்றால் சென்னை அவ்வளவுதான். ஜடேஜா அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதல். இதேபோல் பேட்டிங் சொதப்பதல் மீண்டும் நடைபெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றை எதிர்பார்க்க முடியாது, பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ஒருவேளை கேதர் ஜாதவ் வேண்டுமென்றால் மாற்றப்படலாம். வாட்சன் நல்ல தொடக்கம் கொடுக்க வில்லை என்றால், இப்படி சொதப்பல் நடக்கத்தான் செய்யும்.

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் வேகப்பந்து வீச்சில் வெயின் பிராவோ இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம். இதுவரை ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய சென்னைக்கு 6 பந்து வீச்சாளர் என்ற ஆப்சன் கிடைத்துள்ளது. இது அணிக்கு சற்று கூடுதல் பலம் என்றே சொல்லலாம். தீபக் சாஹர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். பவர் பிளேயில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு வந்தது சற்று ஆறுதல். டெத் ஓவரில் கூடுதல் கவனம் செலுத்தினால் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். 

சாம் கர்னனுக்கும் இதே நிலைதான். 17-வது ஓவரில் அவர் விட்டுக்கொடுத்த 17 ரன்கள்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவரது பணியை சரியாக செய்தார். மூன்று பேரும் புதுப்பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர்கள். டெத் ஓவரில் அசத்தினால் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.

சென்னை அணியின் முதுகெலும்பாக விளங்கும் சுழற்பந்து வீச்சு மிஸ்சிங். சாவ்லா ஒரு பக்கம் தாக்குப்பிடித்து வீசினாலும், மறுபக்கத்தில் ஜடேஜா மிஸ்சிங். சென்னை அணியை பொறுத்த வரைக்கும் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சுடன் ஆரம்பித்து அதிர்ச்சி கொடுக்கும். தற்போது அந்த நிலை இல்லாமல் உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டு வர முடியாமால் உள்ளது. சாம் கர்ரனா? இம்ரான் தாஹிரா? என்ற குழப்பத்தில் சென்னை அணி உள்ளது.

ஒட்டு மொத்தத்தில் பேட்டிங்கில் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணியில் பஞ்சாபும் ஒன்று. அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர், கேஎல் ராகுல் கேப்டன் காம்பினேசனுடன் உத்வேகத்தில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 158 இலக்கை சேஸிங் செய்யும்போது, கடைசி 3 பந்தில் ஒரு ரன் எடுக்க முடியாமல் போட்டியை ‘டை’ ஆக்கி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. அந்த அணிக்கு இது மிகப்பெரிய தடங்களாக ஏற்பட்டதே என்றே சொல்லாம்.

அந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்ப்பதே தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல்தான். துபாயில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கெதிராக கேஎல் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மயங்க் அகர்வாலும் சதம் அடித்தனர். இருவரும் ஆட்டமிழந்தால் என்ன ஆகும் என்பது மும்பை அணிக்கெதிராக தெளிவாக தெரிந்தது. 192 ரன்கள் இலக்கை நோக்கி செல்லும்போது கேஎல் ராகுல் 17 ரன்னிலும், மயங்க் அகர்வால் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் அணி 143 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. மிடில் ஆர்டர் வரிசையில் கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் இதுவரை பலன் இல்லை. மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன் சூப்பர் டூப்பர் ஹிட்டர்கள். கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலைத் தவிர்த்து பேட்டிங் பொறுப்பை இவர்கள் எடுத்துக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரச்சனை இருக்காது.

அந்த அணிக்கு மிகப்பெரிய தலைவலியே டெத் ஓவரில் பந்து வீசுவதுதான். முகமது ஷமி (8 விக்கெட் உடன் பர்பிள் கேப்), காட்ரெல் தொடக்கத்தில் நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் டெத் ஓவரில் கோட்டை விட்டு விடுகிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காட்ரெல் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விட்டுக்கொடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மும்பைக்கு எதிராக கடைசி 4 ஓவரில் மட்டும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அத்துடன் கடைசி 6 ஓவரில் 104 ரன்கள் வாரி வழங்கியது. சுழற்பந்து வீச்சில் இளம் வீரர் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசுகிறார். இன்னொரு தரமான சுழற்பந்து வீச்சாளர் தேவை. முருகன் அஸ்வின் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். ஆர்சிபி-க்கு எதிராக 3 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 1.3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் முருகன் அஸ்வினை சரியான பயன்படுத்தாதது குறித்து சச்சின் விமர்சனம் செய்திருந்தார்.

அப்படி இருந்தும் அவர் மும்பைக்கு எதிராக அவர்கள் எடுக்காதது தவறு. கிருஷ்ணப்பா கவுதமை களம் இறக்கியது. இவர் மும்பைக்கு எதிராக 45 ரன்களும், டெல்லிக்கு எதிராக 39 ரன்களும் விட்டுக்கொடுத்தார். முஜீப் உர் ரஹ்மானை இன்னும் களம் இறக்காமல் உள்ளனர். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது அந்த அணிக்கு சற்று பலவீனமாக இருக்கிறது. 

டெத் ஓவர் தவறை சரி செய்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீறு கொண்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் இரு அணிகளுக்கும் இந்த போட்டியன் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தலைப்புச்செய்திகள்