Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபர்மசூதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 04, 2020 05:17

திருநெல்வேலி: அண்மையில் பாபரிமசூதி விவகாரத்தில், லக்னோ சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்,  திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலாண்மைக் குழு தலைவர் சுலைமான், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, கண்டன உரை நிகழ்த்தியதாவது:
பாபர்மசூதி வழக்கில், லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ள தீர்ப்பில்,  தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றம் சாட்டபபட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது ஆகும். 

கடந்த 1992ம் ஆண்டில், பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது, அதில் யாரெல்லாம் ஈடுபட்டனர்? என்பதை, உலகம் முழுமைக்கும், நன்கு தெரியும். அவ்வாறு இருக்க,  குற்றவாளிகளை வேண்டுமென்றே விடுதலை செய்திருப்பதின் மூலம்,  நீதித்துறைக்கு, அழிக்க முடியாத களங்கம் ஏற்பட்டு விட்டது. நீதிமன்றங்கள் மீது, மக்கள் கொண்டிருந்த மதிப்பு மற்றும் மரியாதை ஆகியன, முற்றிலும் சிதைந்து விட்டன. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக, நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது? என்பதை, இந்த தீர்ப்பு அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. இவற்றிற்கெல்லாம், உரிய நேரம் வரும்போது, காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் நடைபெற்ற இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம், மாநில செயலாளர்கள் யூசுப் அலி, செய்யது அலி, மாவட்டச் செயலாளர் முகம்மது நவாஸ்,  பொருளாளர் முகம்மது மைதீன், துணைத்தலைவர் முகம்மது காசீம், துணைச்செயலாளர் அகமது  ரோஷன் மற்றும் முன்னணித் தொண்டர்கள் ரூபான், பசீர், அப்துல் மஜீத் சேட், செய்யது மைதீன் உட்பட ஆண்கள், பெண்கள் என, மொத்தம் சுமார் ஆயிரம் பேர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால், திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து தேக்கம் ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்