Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து முன்னணி ராம.கோபாலன் மறைவு: திருப்பூரில் மெளன அஞ்சலி ஊர்வலம்

அக்டோபர் 04, 2020 05:28

திருப்பூர்: இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் மறைவுக்கு திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மெளன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் கடந்த புதன்கிழமை காலமானார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மெளன அஞ்சலி ஊர்வலமானது திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது. இதன் பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த ராம.கோபாலனின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மேகாலய மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்து முன்னணி மாநில செயலாளர்கள் செந்தில்குமார், தாமு வெங்கடேஷ்வரன், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஊர்வலத்தை ஒட்டி திருப்பூர் மாநகரில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்