Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹத்ராஸில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் சந்திப்பு 

அக்டோபர் 04, 2020 06:43

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து உ.பி.மாநிலம் ஹத்ராஸ்க்கு காரில் வந்து இறங்கினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் வேணுகோபால், சௌத்ரி, புனியா உள்ளிட்டோரும் வந்தனர். உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்தனர்.  முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹத்ராஸ் செல்ல முயன்ற போது ராகுல் காந்தியை போலீசார் தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராகுல் கீழே விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு தேசிய தலைவரை எப்படி இவ்வளவு மோசமாக அவமதிக்கலாம்? என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஹஸ்தராஸ் சம்பவத்தில் சரியாக செயல்படவில்லை என்று கூறி எஸ்.பி. டி.எஸ்.பி. மற்றும் போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அதேநேரம் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்னின் குடும்பத்தினரை சந்தித்து செய்தி சேகரிக்க ஊடகங்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊடகவியலாளர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு ஆடியோக்கள் லீக் ஆகியது. இதனால் மொத்த ஊடகங்களும் தற்போது ஹஸ்ராஸ் விவகாரத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இப்படி நெருக்கடிகள் அதிகரித்த நிலையில் என்ன ஆனாலும் சரி? யாராலும் நான் ஹத்ராஸ் செல்வதை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து காரில் உத்தரப்பிரதேசத்தின் ஹர்தாஸ்க்கு புறப்பட்டு சென்றனர். ராகுலுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் புறப்பட்டனர்.

இதனால் டெல்லி நொய்டா சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மட்டும் சென்ற காரை போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்கவில்லை. தற்போது காரை பிரியங்கா காந்தி ஓட்டிச்செல்கிறார்கள். காரில் ராகுல் காந்தி மற்றும் வேணுகோபால், சௌத்ரி, புனியா காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர் உடன் சென்றார்கள்.

நேற்றுமுன்தினம் இரவு 7 .40 மணி அளவில் ஹர்தாஸ் வந்தடைந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது பிரியங்கா காந்தி கூறும் போது, குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். நீதி வழங்கப்படும் வரை, இந்த போராட்டத்தை நாங்கள் தொடருவோம். இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பையும் விரும்புகிறார்கள் என்றார்.

டெல்லி-நொய்டா எல்லையில், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது குறுக்கே சென்று பிரியங்கா காந்தி, அவர்கள் மீது தடியடி விழாமல் தடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருவதால் உ.பி. மாநில அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

தலைப்புச்செய்திகள்