Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 குழந்தைகளுடன் மாயமான மனைவி: ஓராண்டுக்கு பின் கண்டுபிடித்த போலீஸ்

அக்டோபர் 04, 2020 10:47

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முறப்பநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனைவி இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போனவர்களை ஒரு ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்து அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பதவியேற்ற பிறகு கொலை, கொள்ளை, மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் காவல்நிலையங்களில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை மீண்டும் கண்டுபிடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ளதைக் கண்டு பிடிக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில்  ரூரல் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை கண்டு பிடிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. டி.எஸ்.பி. பேரரசு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் முறப்பநாடு புதுக்கோட்டை சிப்காட் உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழக்குகளை பதிவு செய்யப்பட்டவர்களை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முறப்பநாடு காவல் நிலையத்தில் காவேரி சாமி என்பவர் தனது மகள் நாகலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை என கடந்த ஓராண்டுக்கு முன் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முறப்பநாடு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நாகலட்சுமி திருப்பூரில் இருப்பதை கண்டு பிடித்தனர். தொடர்ந்து நாகலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளை போலீசார் மீட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கணவர் மணிகண்டனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நாகலட்சுமி திருப்பூரில் கூலி வேலைக்கு சென்றதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாகலட்சுமியை கணவருடன் நேற்று சேர்த்து வைத்தனர். அவர்கள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முறப்பநாடு காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
 

தலைப்புச்செய்திகள்