Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏர்வாடி கிராம பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தொடர் போராட்டம் 

அக்டோபர் 05, 2020 07:08

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மூன்று மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் குழந்தைகள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம். ஏர்வாடி அருகே உள்ள சடைமுனிவலசை கிராம மக்கள் மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது சடைமுனிவலசை. கடற்கரை கிராமமான இங்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரி செய்யப்படாததால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி தனியார் குடிதண்ணீர் லாரிகளில் குடம் ஒன்றுக்கு  10 ரூபாய் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு 8 ரூபாய்க்கு வாங்கி வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத நிலையில் உள்ள சிலர் கடல் தண்ணீரை எடுத்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலநிலையும் உள்ளது.

குடிநீர் வழங்ககோரி பலமுறை ஏர்வாடி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு கொடுத்து முறையிட்டும் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யாததால் அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் வரை காலிக்குடங்களுடன் அக்கிராம சாலையில் அமர்ந்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த ஏர்வாடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர். ஆனாலும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து குழந்தைகள் முதியவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்