Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவில் இருந்து மீண்ட பெண், அரசு ஆஸ்பத்திரியில் திடீர் மரணம்

அக்டோபர் 06, 2020 06:14

நாகர்கோவில்: குமரி மாவட்டம் மருதங்கோடு செம்மங்காலை காட்டுவிளை வீட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி சந்திரிகா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததாக கூறி மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது சந்திரிகாவுக்கு தொற்று இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 3-ந் தேதி நடந்த பரிசோதனையில் சந்திரிகாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட அவர் 5-ந் தேதி (அதாவது நேற்று) டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் மாலை சந்திரிகா இறந்து விட்டார். கொரோனா தொற்று நீங்கி விட்டதாக கூறி டிஸ்சார்ஜ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரிகா திடீரென இறந்து போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து சந்திரிகாவின் மகன் அனீஷ் (24) என்பவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த என் தாயாருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 5-ந் தேதி வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் டாக்டர்கள் கூறினர். ஆனால், 4-ந் தேதி மாலை அவர் திடீரென இறந்துவிட்டார். அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் என் தாயாருக்கு நர்சு ஒருவர் வந்து ஊசி போட்டார். ஊசி போட்ட சில வினாடிகளில் தாயார் கை, கால்கள் உதறி துடித்துள்ளார். நான் உடனே நர்சை அழைத்தேன். பின்னர் பரிசோதனை செய்து விட்டு என் தாயார் இறந்து விட்டதாக தெரிவித்தார். நர்சு செலுத்திய மருந்தால் தான் என் தாயார் மரணம் அடைந்துள்ளார். தவறான மருந்தை செலுத்தியதால் தான் அவர் இறந்து விட்டார். எனவே சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்