Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே முதல்வர் வேட்பாளர்: திண்டுக்கல் லியோனி கிண்டல்

அக்டோபர் 06, 2020 07:36

சென்னை: ''எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னம்மா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் இதுவே ஓ.பி.எஸ் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம்,'  என்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கிண்டலாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று 7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடனும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சினை பற்றி பா.ஜ.க. தலைவர்கள் எந்த கருத்தும் கூறாமல் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டனர். தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ஓ.பி.எஸ். நேற்று பகவத் கீதையை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பற்றியும், ஓ.பன்னீர் செல்வத்தின் ட்விட்டர் பதிவு பற்றியும் கிண்டலடித்துள்ளார் தி.மு.க. செய்தி தொடர்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி.

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பற்றி லியோனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த லியோனி, என்னைப்பொறுத்தவரைக்கும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இருவருமே தகுதியற்றவர்கள் தான். இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய லியோனி, ஓ.பி.எஸ். ஏற்கெனவே நாளை நமதே பாட்டை தாய் வழி வந்த தங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே என ட்வீட் செய்திருந்தார். இன்று அந்த தங்கங்கள் எல்லாம் தகரங்களாக மாறிவிட்டது. அவர் சொன்ன தங்கங்களில் பாதி பெரியகுளத்திலும் மீதி சென்னையிலும் தான் உள்ளது. அந்த தங்கங்களில் எது போலி? எது தங்கம்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னம்மா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும். இதுவே ஓ.பி.எஸின் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம். விரக்தியில் இருக்கும் போதுதான் ஒரு மனிதன் பேசுவான். இந்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை முடியப்போகும் நேரத்தில்தான் பேசுவார்கள். தத்துவங்களை ஒரு மனிதன் நிறைய பேசுகிறான் எனில் வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு ஒரு மனிதன் போய்விட்டான் என்றுதான் அர்த்தம். அப்படிதான் ஓ.பி.எஸ் பகவத் கீதையை மேற்கொள் காட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் உட்பட எல்லோருக்குமே நாற்காலிகள் மீது ஆசை உள்ளது. என்னை பொறுத்தவரை முதல்வராக இருவருமே தகுதி இல்லாதவர்கள். சசிகலா வந்த பிறகு அவரிடம் யார் முழுமையாக சரண்டர் ஆகிறார்களோ அதன் பின் அவர்களே முழு கட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, முதல்வர் வேட்பாளராகவும் வருவார்கள். ஒரு சாக்குக்குள் கீரி, பாம்பு, கரடி, எலி, பூனை என எல்லாவற்றையும் கட்டிவைத்துள்ள மூட்டை தான் அ.தி.மு.க. மூட்டையை திறந்தால் யாரைக்கடித்து எது மேலே வருமோ அதுதான் அந்த கட்சியையே அழிக்க போகிறது. அதுதான் முதல்வர் வேட்பாளராகவும் வரும் என்று நினைக்கிறேன். இவ்வாறு திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்