Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின் கண்டனம்

அக்டோபர் 06, 2020 08:20

சென்னை: ''அ.தி.மு.க. அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும். அராஜகத்தைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, தமிழக காவல்துறை கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன்,''  என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கிறதா?, அ.தி.மு.க. அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த தலித் பெண்ணின் பாலியல் வன்கொடுமை, இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு நீதி கேட்டு  தி.மு.க. மகளிரணியினர் சின்னமலையில் இருந்து கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். இந்தப் பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பேரணி தி.மு.க. மகளிரணி தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடந்தது. பேரணி துவங்கிய சில நிமிடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், கனிமொழிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கனிமொழி மற்றும் மகளிரணியினர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிய பின்னர், வேனை நகர விடாமல் தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. சைதாப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. மகளிரணியினர் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேரணியை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியபோது மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளை சரமாரியாக சாடிப் பேசி இருந்தார். உத்தரப்பிரதேசத்தில் அப்பாவி இளம்பெண்ணை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேசம் ரத்தப்பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.

தலைப்புச்செய்திகள்