Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டி?

ஜனவரி 24, 2019 12:57

புதுடெல்லி: நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. 

பிரியங்காவை பொருத்தவரை அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தொடர்பில் இருப்பவர். அந்த இரு தொகுதிகளிலும் அவருக்கு அபரிதமான செல்வாக்கு இருக்கிறது. 

இதில் அமேதி தொகுதியில் ராகுல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி. ஆக இருந்து வருகிறார். எனவே நான்காவது முறையாக அவர் அமேதியில் போட்டியிட உள்ளார். 

சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தடவை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சு நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். 

ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் வெற்றி 100 சதவீதம் உறுதியானதாகும். அத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது. 

ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா 5 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார். அந்த 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான். எனவே ரேபரேலி தொகுதியின் சந்து பொந்துகள் கூட பிரியங்காவுக்கு தெரியும். இது பிரியங்காவின் மிகப்பெரிய பலமாகும். 
 

தலைப்புச்செய்திகள்