Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுங்கத்துறை வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன்

அக்டோபர் 06, 2020 11:45

கொச்சி: ''கேரளா தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறை வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருந்தபோதும், என்.ஐ.ஏ. வழக்கில் விசாரணையை அவர் எதிர்கொண்டு வருவதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்,'' என்று தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை ஒரே சமயத்தில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை ஆகிய மத்திய அரசின் முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
விசாரணையில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனுடன் ஸ்வப்னாவுக்கு பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து சிவசங்கரன் நீக்கப்பட்டார்.

சிவசங்கரனிடம் சுங்கத்துறையும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தின. இதையடுத்து, ஸ்வப்னாவின் வங்கி லாக்கர்களிலிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணமும், சுமார் 30 கிலோ தங்கமும் எடுக்கப்பட்டன. ஸ்வப்னா சுரேஷ் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்ததால், பல முக்கிய பிரமுகர்களிடம் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் கேரள தங்கக் கடத்தலில் சுங்கத்துறை தொடர்பான வழக்கில் ஸ்வப்னாவுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 60 நாட்கள் கடந்த நிலையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவழக்கு நடைமுறையின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 60லிருந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சுங்கத்துறை வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், என்.ஐ.ஏ. வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட வழக்கில் அவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஆதலால், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்