Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்.முருகனை துளைத்தெடுத்த ஜே.பி.நட்டா: டெல்லி சந்திப்பின் போது நடந்தது என்ன?

அக்டோபர் 06, 2020 11:46

புதுடெல்லி: கடந்த 2-ம் தேதியன்று டில்லியில் தன்னை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார் ஜே.பி.நட்டா. அ.தி.மு.க. தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகார்கள், சட்டமன்ற தேர்தல் பணிகள், ரஜினியின் நிலைப்பாடு, தி.மு.க.வின் செயல்பாடு என பல்வேறு விவகாரங்கள் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வியூகம் குறித்து முருகனிடம் விலாவாரியாக விளக்கியிருக்கிறார் ஜே.பி.நட்டா.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்புக்கு முன் எல்.முருகன் கொரோனா சோதனை செய்திருக்கிறார். அதில், நெகட்டிவ் என முடிவு வந்ததை அடுத்து நட்டாவின் அப்பாயிண்ட்மென்ட் முருகனுக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து நிகழ்ந்த சந்திப்பில் மிக சீரியஸாக முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் உன்னிப்பாக கவனித்து வருவதால் அதனை மனதில் கொண்டு உங்கள் பணிகளை கவனியுங்கள் என முருகனிடம் கூறியிருக்கிறார் ஜே.பி.நட்டா. மேலும், சட்டமன்றத் தேர்தல் எந்தளவு முக்கியமோ அதைவிட ஒரு படி கூடுதல் முக்கியத்தை கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் காட்டுங்கள் என முருகனிடம் அறிவுறுத்தியிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் நிகழும் அனைத்து குழப்பங்களையும் அங்குலம், அங்குலமாக விளக்கியிருக்கிறார் எல்.முருகன். அதை ரசித்தவராக சரி நீங்கள் சாதகமான தொகுதிகளை தேர்வு செய்து அங்கு களப்பணிகளை தொடங்குங்கள் என நட்டா உத்தரவிட்டதாக தெரிகிறது. ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு பற்றியும் முருகனிடம் கேட்டறிந்திருக்கிறார். இதனிடையே பா.ஜ.க.வினருக்கு தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் குடைச்சல் கொடுப்பதாக புகாரும் கூறியிருக்கிறார் முருகன்.

தமிழகத்தில் கட்சியின் எழுச்சி எந்தளவிற்கு உள்ளது, புதிதாக இன்னும் யார் யார் வருவார்கள், மாற்றுக்கட்சியினரை இழுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், என்பன உள்ளிட்ட கேள்விகளை முருகனிடம் கேட்டிருக்கிறார் ஜே.பி. நட்டா. இறுதியாக ஜே.பி.நட்டாவிடம் இருந்து விடைபெறுவதற்கு முன் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தில் யாருக்கும் வாய்ப்பு இல்லாதது பற்றியும் மத்திய அரசின் வாரியங்களில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பொறுப்பு கொடுப்பது பற்றியும் கம்மிய குரலில் பேசியிருக்கிறார் முருகன். இதனை கேட்டுக்கொண்ட ஜே.பி.நட்டா உறுதியான எந்தப் பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்