Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈ.பி.எஸ் முதல்வர்: ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர்? நாளைய அ.தி.மு.க. க்ளைமாக்ஸ் இதுதான்  

அக்டோபர் 06, 2020 11:48

சென்னை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் என்கிற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்துவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நிம்மதியடைந்துள்ளனர். அ.தி.மு.க.வில் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி பூசல் போன்ற சலசலப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால், திடீரென முதல்வர் வேட்பாளர் நானே என ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கப் போய் அக்கப்போர் ஆரம்பித்தது.

கடந்த 3 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஆட்சியை பிரச்சனை இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வரின் கலகக் குரலை முதல்வர் தரப்பால் ஏற்க முடியவில்லை. அ.தி.மு.க.வின் செயற்குழுவிலும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஓ.பி.எஸ். தரப்பைப் பொறுத்தவரை எதையும் விட்டுக் கொடுக்க முடியாது என்கிற நிலையில் இருந்தது. இதனால் அ.தி.மு.க.வில் விரிசல் அதிகமானது. இருதரப்பும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியது. அத்துடன் முதல்வர் வேட்பாளர் குறித்து இன்று அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அ.தி.மு.க.வில் பதற்றம் நீடித்து வந்தது. இருதரப்பும் ஆதரவாளர்களுடன் இடைவிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் இருதரப்பும் ஒருவழியாக ஏற்கனவே பேசப்பட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதன்மூலமாக ஆட்சி ஒருவரிடமும் கட்சி ஒருவரிடமும் இருக்கும். இது அ.தி.மு.க.வின் எதிர்காலத்துக்கும் சுமூகமாக இருக்கும் என்ற அடிப்படையில் இருதரப்பும் இதை இணக்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறதாக தெரிகிறது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்