Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 மாதமாக கொரோனாவால் மூடப்பட்டிருந்த மேலப்பாளையம் மாட்டுச்சந்தை துவக்கம்

அக்டோபர் 07, 2020 05:03

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த, திருநெல்வேலி மேலப்பாளையம் மாட்டுச்சந்தை, செயல்படத் தொடங்கியது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற, திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில், ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க் கிழமைகளில் மட்டும்,  நடைபெற்று வரும் மாட்டுச்சந்தை, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது.

கடந்த ஆறுமாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த மாட்டுச்சந்தை,  மத்திய- மாநில அரசுகளின் உத்தரவை தொடர்ந்து, வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த மாட்டுச்சந்தையில், முதல் நாளான நேற்றுமுன்தினம் (அக்.6) ஒரே நாளில் மட்டும், ஆயிரத்தும் மேற்பட்ட மாடுகள் வந்திருந்தன.

சந்தைக்கு வருகிற மாடுகளின் உரிமையாளர்கள்,  மாட்டுத்தரகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்காக, சந்தையின் நுழைவாயிலில், சானிடைசர்கள் வைக்கப்பட்டிருந்தன. முகக்கவசங்கள் அணிந்து வந்தவர்கள் மட்டுமே, சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியைப் பேணி நடக்குமாறு, அனைவரும் அறிவித்தப்பட்டனர்.

மாட்டுச்சந்தையுடன், ஆட்டுச்சந்தையும் திறக்கப்பட்டது. அங்கும் கணிசமான அளவுக்கு, ஆடுகள் வந்திருந்தன. அத்துடன் கோழிகள், கருவாடுகள் மற்றும் காய்கறிகளின் விற்பனையும், களைகட்டியது.

தலைப்புச்செய்திகள்