Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க. மாநில நிர்வாகி தி.மு.க.வில் ஐக்கியம்

அக்டோபர் 07, 2020 07:53

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அணி மாநில துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள் ஸ்டாலின் முன்னிலையிலேயே தங்களை தி.மு.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் பாதுகாவலர் சுனில் தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

பா.ம.க. தலைமைக்கு கோபம் ஏற்படுத்தும் வகையில் இந்த இணைப்பு நிகழ்வு நடந்துள்ளதால் தி.மு.க.வுடன் அந்தக் கட்சி கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் சின்னச்சாமி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பா.ம.க. மற்றும் பா.ஜ.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். உரிய நேரத்தில் கவுரவிக்கப்படுவீர்கள் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரை ஸ்டாலின் தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டது பா.ம.க. தரப்புக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

இதனால் துரைமுருகன் மேற்கொண்டு வந்ததாக கூறப்படும் கூட்டணி பேச்சுவார்த்தை இனி தொக்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதை போல் எதுவும் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தலைப்புச்செய்திகள்