Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.டி.அரசகுமாருக்கு தி.மு.க.வில் பொறுப்பு: எதிர்ப்பும், ஆதரவும்: நடந்தது என்ன?

அக்டோபர் 07, 2020 07:56

சென்னை: பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சூட்டோடு சூட்டாக பொறுப்பு தந்துவிட்டதால் தி.மு.க. அதிருப்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் மறுபுறம் ஆதரவும் தெரிவித்துள்ளனர். "இப்படி செயல்பட்டால், ஊழல் இல்லாத ஆட்சியை இவர்களால் மட்டும் எப்படி உருவாக்க முடியும்?" என்று பி.டி. அரசகுமாருக்கு பொறுப்பு அளித்தது குறித்து நடுநிலையாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க.வில் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், தலைமை கழக செய்தித்தொடர்பு செயலாளராக பி.டி.அரசகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இது தி.மு.க. தரப்பில் சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை தந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமல்ல, நடுநிலையாளர்கள்  அரசகுமாருக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது குறித்து தெரிவித்ததாவது:

இவர் அன்னைக்கு வெறும் குமாரா தான் இருந்தார். மக்கள் முன்னாடி தன்னை காட்டிக்க நிறைய செயல்பாடுகளில் ஈடுபட்டார். கல்வி நிறுவனங்களில் அவர் கவனம் திரும்பியது. அப்போதான் நிறைய தொழிலதிபர்கள் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் தி.மு.க.வில் தான் இருந்தார். அப்பறம், அ.தி.மு.க.வுக்கு போனார். பணமோசடி வழக்கு இவர் மீது விழுந்ததும், அங்கேயும் விரிசல். அப்பறம் சொந்தமா கட்சி ஆரம்பிச்சார். அதையும் சரியா நடத்த முடியாம, அந்த கட்சியை கூண்டோடு கலைத்துவிட்டு பா.ஜ.க.வுடன் வந்து சேர்ந்தார். இப்படி எந்த கட்சியிலுமே நிரந்தரமா இல்லாதவருக்கு இப்படி தி.மு.க. பொறுப்பு தந்ததுதான் ஆச்சரியமா இருக்கு.

மற்ற கட்சிகளில் இருந்து வருவோரை ஆராயாமல், அங்கு அவர்கள் செய்திருக்கும் களப்பணி உட்பட எதையுமே அறிந்து கொள்ளாமல், தி.மு.க. உடனே யாராக இருந்தாலும் கட்சியில் சேர்த்து கொள்கிறது. அத்துடன், உடனடியாக அவர்களுக்கு பதவியும் தந்துவிடுகிறது. இவர் தான் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் வேண்டும் என தமிழுக்கு எதிராக வழக்கு போட்டவர். செக் மோசடி, பண மோசடி இப்படி இவர்மீது நிறைய இருக்கிறதாக தெரிகிறது. இனி தி.மு.க. தான் வருங்காலம்னு நினைச்சிட்டாரு. அதனால இங்க வந்து சேர்ந்துட்டார். இந்த மாதிரி நபர்களை எல்லாம் பா.ஜ.க.தான் சேர்த்து வந்தது. இப்போது தி.மு.க.வும் இப்படி இறங்கிவிட்டது வேதனையாக இருக்கிறது.

கார்ப்பரேட் ஐ.டி கம்பெனிகளில் மட்டுமே இந்த மாதிரி நபர்கள், உடனடியாக விலகி இன்னொரு கம்பெனிக்கு போவார்கள்.  கலைஞர் கட்டிக்காத்த தி.மு.க.வும் இப்படியா? யார் வந்தாலும் கதவை திறந்து வெச்சிடலாமா? இந்த மாதிரி ஆட்களை உள்ளே சேர்த்து, சூட்டோடு சூட்டாக பொறுப்பும் தந்துவிட்டால், ஊழல் இல்லாத ஆட்சியை இவர்களால் மட்டும் எப்படி உருவாக்க முடியும்?.
இவ்வாறு நடுநிலையாளர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

ஆனால், பி.டி. அரசகுமார் நியமனத்தை தி.மு.க. தரப்பில் பலரும் வரவேற்றுள்ளனர். "எதையும் ஆராயாமல் தி.மு.க. தலைமை செய்வதில்லை. இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முடிவில் இருக்கும்போது, இதெல்லாம்கூட யோசிக்காமல் இருப்பார்களா என்ன? பி.டி.அரசகுமார் நிறைய அரசியல் அனுபவம் பெற்றவர். பலகாலம் விசுவாசமாக இருந்த முக்கிய நபர்களே, இங்கிருந்து பா.ஜ.க.வுக்கு தாவும்போது, ஏன் அங்கிருந்து மூத்த தலைவர்கள் இங்கே வரக்கூடாது? நாலும் அறிந்துதான் தி.மு.க. இந்த முடிவை செய்து பொறுப்பும் தந்திருப்பார்கள். அதனால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிடக்கூடாது என்று தி.மு.க. உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். 

தலைப்புச்செய்திகள்