Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

அக்டோபர் 08, 2020 09:47

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மனை பிரிவாக மாற்றி விற்பனை செய்ய முயற்சித்த 1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையின் காரணமாக மீட்டனர். காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பான முடீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான காலியிடம் ஓரிக்கை மின்வாரிய துணை மின் நிலையம் அருகில் உள்ளது.

இந்நிலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அப்பகுதியில் உள்ள நிலத்தை வாங்கி வீட்டுமனைகளாக மாற்றி அத்திவரதர் அவின்யு என்ற பெயரில் நகர் பிரிவாக விற்பனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் மனைப்பிரிவு அமைக்கப்பட்ட பகுதியிலிருந்த பான முடீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் அமைத்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பிலான 16 சென்ட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றி விட்டு கோவிலுக்குச் சொந்தமான இடம் என்று பெயர் பலகையை வைத்தனர்.

DTCP அங்கீகாரம் பெற்று அமைக்கப்பட்ட மனைப்பிரிவில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்திருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கோவில் நிலத்தையும் சேர்த்து  அங்கீகாரம் வழங்கியது அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்