Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்கப்பட்டாரா? பா.ஜ.க. மேலிடமே முடிவு செய்யும்: வானதி சீனிவாசன் 

அக்டோபர் 09, 2020 11:37

கோவை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவரை ஏற்பது குறித்து டெல்லி பா.ஜ.க. மேலிடம் தான் முடிவு செய்யும்,'' என பா.ஜ.க. மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஓ.பி.எஸ். உடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவேண்டும் என்று இருவரும் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அ.தி.மு.க. தங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் அறிவித்திருப்பதால் வருத்தத்தில் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் சமீபத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட்டணி கட்சி முதல்வர் வேட்பாளர், கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட வேண்டிய விஷயம். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்.

தேர்தல் நெருங்கி வரும் போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை வரும் காலங்களில் தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமையும். அது அ.தி.மு.க.வாக இருக்கலாம். தி.மு.க.வாகவும் இருக்கலாம். அல்லது இரண்டும் இல்லாத வேறு கட்சிகளாக கூட இருக்கலாம் என்றார்.

ஆனால், இதுபற்றி விளக்கம் கேட்ட போது பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், கூட்டணியில் தொடரக்கூடாது என நான் சொல்ல மாட்டேன். அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்துவேறுபாடுகள் என்பது அரசாங்க ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அதற்காக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கருத தேவையில்லை" என்றார். 

இந்நிலையில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் குறித்து அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
பா.ஜ.க. ஏற்கனவே தி.மு.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட கூட்டணி அமையலாம்.

கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும். அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும். இவ்வாறு வானதிசீனிவாசன் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்