Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. தி.மு.க.வில் திடீர் ஐக்கியம்

அக்டோபர் 09, 2020 12:17

சென்னை: விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். 
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் அணியில் இணைந்த 18 எம்.எல்.ஏ.க்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர்.

இதனால் உமா மகேஸ்வரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 2019-ல் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தமக்கு சீட் வழங்க வேண்டு என்று அத்தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் (2011-16) மல்லுக்கட்டிப் பார்த்தார். ஆனால் மார்க்கண்டேயனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

அவருக்குப் பதில் சின்னப்பன், அ.தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சின்னப்பனை எதிர்த்து மார்க்கண்டேயன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இதனால் அ.தி.மு.க.வில் இருந்து மார்க்கண்டேயன் நீக்கப்பட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் சின்னப்பன் 70,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க.வின் ஜெயக்குமார் 41,585 வாக்குகளைப் பெற்றார். 3-வதாக வந்த மார்க்கண்டேயன் 27,456 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து தனக்கான தனிப்பட்ட செல்வாக்கை காட்டினார். இது அ.தி.மு.க.வினரையே அதிரவு வைத்தது.

இந்நிலையில் மார்க்கண்டேயன் தி.மு.க.வில் இணைந்ததால் விளாத்திக்குளத்தில் தி.மு.க. பலம் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்