Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபநாசம் அணை சுற்றுலாத்தலத்தில் இயந்திர படகுகள் இயக்க கோரிக்கை

அக்டோபர் 09, 2020 12:24

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின், சுற்றுலாத்தலங்களில், ஏழு ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகளுக்கான இயந்திரப் படகுகள், இயக்கப்படாத காரணத்தால்,  இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிபக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில், அடர்ந்த காடுகளையும், அரிய விலங்குகள், பறவைகள் போன்றவை வாழுகின்ற , எழில் கொஞ்சும் இயற்கை இருப்பிடங்களையும்,  வெள்ளியை உருக்கிவிட்டாற் போன்ற அருவிகளை கொண்ட நீர்வீழ்ச்சிகளையும் உடைய 80  ஆண்டுகள் பழைமை வாய்ந்த,  அருமையான சுற்றுலாத்தலம் பாபனாசம் ஆகும்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து, சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, பாபனாசம் அணையைச்சுற்றி காரையார், காணிக்குடியிருப்பு, பாணதீர்த்தம் போன்ற சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. இதில் பாணதீர்த்தம் என்பது, காரையாரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில், பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் இயற்கையான நீர்வீழ்ச்சி ஆகும். இந்த அருவிக்கு நீர்வழி போக்குவரத்து மட்டுமே உண்டு என்பதால், கடந்த 60 ஆண்டுகளாக,  இந்த அருவிக்கு செல்வதற்காக, சுற்றுலாப் பயணிகளுக்கென, இயந்திரப்படகுகள் இயக்கப்பட்டு வந்தன. 
பாபநாசம் அணைப்பகுதி புனல் மின்உற்பத்தி பகுதி என்பதாலும், பாபநாசம் புலிகள் காப்பக பகுதி, தடைசெய்யப்பட்ட வனப்பகுதி என்பதாலும், இயந்திரப்படகுகளை இயக்குவதற்கு,  மின்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரு முக்கியத்துறைகளும், பொது மக்களின் பாதுகாப்பைக் கருதி, இயந்திரப்படகுகளுக்கு 2013ம்- ஆண்டில், நிரந்தர தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோரால் தொடரப்பட்டுள்ள வழக்குகள், தற்பொழுது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றன. இதற்கிடையே, இயந்திரப்படகுகள் கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கப்படாமல், முடங்கிக் கிடப்பதால், அவை முற்றிலும் சிதிலமடைந்து விட்டன என்றும்,  தங்களுக்கு வேறு தொழில்கள் எதுவும் தெரியாத காரணத்தினால், தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டது என்றும், இயந்திரப் படகுகளின் உரிமையாளர்களும்,  படகோட்டிகளும், கண்ணீர் மல்க, கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, பாணதீர்த்தம் பகுதிக்கு, இயந்திரப்படகுப் போக்குவரத்தை மீண்டும்  தொடங்குவதற்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்