Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

அக்டோபர் 10, 2020 06:51

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்ஐஆர் பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளை சரியான நேரத்தில் முடித்து குற்றவாளிக்கு உரிய நேரத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் அடங்குவதற்குள் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் பலாத்கார சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்