Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தது

அக்டோபர் 11, 2020 08:21

நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது. பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குமரி மாவட்டம் இயற்கையாகவே பசுமை நிறைந்து காணப்படும் மாவட்டம் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அரிய வகை பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து விட்டு மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு செல்வது வழக்கம்.

இலையுதிர் காலம், வெப்பமடைதல், கடும் குளிரால் உறைபனியாதல் உள்ளிட்ட காரணங்களால் இரை கிடைக்காமல் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பறவைகள் தங்களது வசிப்பிடங்களை விட்டு விட்டு குமரி மாவட்டம் நோக்கி வரும். குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வரத்து இருக்கும். அதாவது கேதை, உள்ளான், பூ நாரை, நாம தாரா, மஞ்சள் மூக்குதாரா உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும். இந்த பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து நீர்நிலைகளில் வசிக்கும் காட்சி, பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு அழகாக இருக்கும்.

ஆனால், குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பறவைகள் வரத்து குறைந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு தற்போது வரை மிகவும் குறைவான வகை பறவைகள் மட்டுமே வந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை பறவைகள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன. ஆனால், கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்போது 3 ஆயிரம் பறவைகள் மட்டுமே வந்துள்ளது தெரியவந்தது. பருவ நிலை மாற்றம் காரணமாகவும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும் பறவைகள் வரத்து குறைந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் கூறினர்.

இதுபற்றி பறவை ஆர்வலர் டேவிட்சன் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் நன்னீர் இடங்கள் நிறைய உண்டு. தேரூர், சுசீந்திரம், பறக்கை, மணக்குடி, ராஜாக்கமங்கலம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் பறவைகள் வருவதுண்டு. பறவைகள் வருகையை பொருத்த வரையில் 3 முக்கிய காரணங்கள் சரியாக இருந்தால் பறவைகள் வரத்து குறையாது. அதாவது வாழிடங்கள் அழிக்கப்படாமல் இருத்தல், பறவைகளை அச்சுறுத்தாமல் இருத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை சரியாக இருந்தால் பறவைகள் ஆண்டுதோறும் அதிகளவில் வரும். ஆனால் குமரி மாவட்டத்தில் ஒகி புயலுக்கு பிறகே பறவைகள் வரத்து குறைந்துவிட்டது.

ஏன் எனில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது. மேலும் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பறவைகளை வேட்டையாடுகிறார்கள். அதோடு பெரும்பாலான குளங்களில் தாமரை வளர்க்கப்படுகிறது. இதன் காரணமாக பறவைகள் குளத்துக்கு வந்தாலே துரத்துகிறார்கள். இதனால் பறவைகள் வரத்து குறைந்து வருகிறது. அதுமட்டும் அல்லாது குளங்களை ஆழப்படுத்தாமல் தூர்சேர்ந்து இருப்பதால் பறவைகளால் முக்குளித்து மீன்களை பிடிக்க முடியவில்லை. இரைதேடி தான் பறவைகள் வருகின்றன. அந்த இரை அவற்றுக்கு கிடைக்கவில்லை எனில் எப்படி இங்கு வரும்? .அதிலும் இந்த ஆண்டு குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நன்கு மழை பெய்தது.

கிழக்கு மாவட்ட பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, சாமிதோப்பு, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லை. ஆனால் இந்த பகுதிகளுக்கு தான் பறவைகள் அதிகளவில் வரும். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டு பறவைகள் வரத்து மேலும் குறைந்துள்ளது. பறவைகள் வரத்தை அதிகரிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்