Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்களது முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் இருக்க முடியும்: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

அக்டோபர் 11, 2020 08:24

கிருஷ்ணகிரி: எங்களது முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் இருக்க முடியும்,''  என்று கிருஷ்ணகிரியில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்ததாவது:

தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுகொள்பவர்கள் மட்டுமே எங்கள் கூட்டணியில் இடம்பெற முடியும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிச்சயம் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது. தொடர்ந்து அ.தி.மு.க.வின் இரு தலைமையில் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு சசிகலா காரணமா? என்ற கேள்விக்கு இரு தலைமையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இதில் எந்த சூழலிலும் சசிகலா தலையிட வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சியும் ஊடகங்களும் தான் பிரச்சினை இருப்பது போல் பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க.வை பிடித்தால் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக கலந்துபேசி முடிவு எடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் குறித்த கேள்விக்கு விரைவில் குழுவிற்கான அதிகாரத்தை தலைமை முடிவு செய்யும். ஆலோசனை குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது. மேலும் சசிகலா அ.தி.மு.க.வில் இணைவதற்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை.

தொடர்ந்து 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் இடம்பெறவில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றச்சாட்டிற்கு 11 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க. ஒருபோதும் யாரையும் புறக்கணிக்காது.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்