Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் திடீர் சந்திப்பு: மேலிடத்தின் அழுத்தமா?  மரியாதை நிமித்தம் தானா? 

அக்டோபர் 11, 2020 08:44

சென்னை: அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததால் அவரை பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க. அ.தி.மு.க. தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் முதல்வரை முருகன் சந்தித்தது மேலிடம் கொடுத்த அழுத்தமா? அல்லது மரியாதை நிமித்தம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இருபெரும் திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளை இணைத்து ஒவ்வொரு முறையும் களம் காணுவது இயல்பான விஷயம்தான். அந்த வகையில், அதற்கான வேலைகளில் இந்த கட்சிகள் இறங்கி இருக்கின்றன. மேலும், தங்கள் கட்சியை பலப்படுத்தும் வேலைகளிலும் மும்முரமாக இறங்கி வருகின்றன. அதேபோல, கடந்த தேர்தலில் தே.மு.தி.க. கடைசியாக வந்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த கட்சி. இப்போது அவர்கள் தனித்து போட்டி என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதை பற்றி மறுபடியும் பேச்செடுக்கவில்லை. விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வு பற்றி வெளிப்படையாக தெரியவில்லை.

இதில், ரெம்பவும் ஆர்வமாக இருப்பது பா.ஜ.க. தான். அ.தி.மு.க. - பா.ஜ.க. தலைவர்களின் சந்திப்புகள், பேட்டிகளும் குழப்பத்தை தந்தபடியே இருக்கின்றன. ஆனால், இவர்கள் கூட்டணி தொடருமா?, தொடராதா? பா.ஜ.க. எதிர்பார்த்த சீட்டை அ.தி.மு.க. ஒதுக்குமா? என்பது பற்றியெல்லாம் சில அரசியல் நோக்கர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன உத்தேச கருத்து இதுதான்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை தனியாக நின்று தேர்தலை சந்திக்க முடியாது.. திராவிட கட்சிகள் உதவி இல்லாமல், தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்று அந்த கட்சி நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான், கூட்டணி வைக்க முயன்று வருகிறது. ஆனால், எதிர்பார்த்த சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக பா.ஜ.க தலைவர்  முருகன் தனியாக 60 இடங்களில் நின்று வெற்றி பெறுவோம் என்றார். இந்த கோரிக்கையை நேரடியாகவே வைத்திருக்கலாம். கோட்டையில் காவி கொடி மலரும் என்று சொல்லி அ.தி.மு.க. தரப்பை ஏன் உசுப்பேத்த வேண்டும்?.

அதனால்தான், பா.ஜ.க.வின் மறைமுக இந்த மிரட்டல் போக்குக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி தந்திருக்கிறார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சொன்னதுமே, முருகன் ஏன் முதல்வரை சந்திக்க சென்றார்? வேளாண் சட்டங்களை வரவேற்கவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய, கருப்பர் கூட்டம் பின்னணியில் உள்ளவர் மீது, நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவதை சொல்வதற்காகத்தான் முதல்வரை சந்திக்க வந்தேன் என்கிறார். வேளாண் சட்டம் இயற்றப்பட்டு இத்தனை நாள் ஆகிறதே? கருப்பர் கூட்டம் விவகாரம் வெடித்து மாசக்கணக்கில் ஆகிறதே? அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளரா? அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் ஏன் பதில் சொல்ல மறுத்துவிட்டார்? இப்படி பல சந்தேகங்கள் எழுகின்றது.

பா.ஜ.க.வை அ.தி.மு.க. பணிய வைக்கிறா? அல்லது அ.தி.மு.க.வை பா.ஜ.க. பணிய வைக்கிறதா? என்று தெரியவில்லை.. ஆனால், பா.ஜ.க. எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதுக்கு காரணம், கட்சிக்குள் தனக்கான செல்வாக்கை எடப்பாடி பழனிசாமி உயர்த்திவிட்டார். வரப்போகிற தேர்தலில் தன் ஆளுமையை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் அவர் உள்ளார். பலம் பொருந்தி வரும் தி.மு.க.வை வீழ்த்த கூட்டணி என்பது நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு தேவைதான். குறிப்பாக, இந்த முறையும் பா.ம.க.வை உள்ளே அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறச் செய்வது முக்கியமாகவே கருதப்படுகிறது. 

வரும் தேர்தலில் இந்தமுறை எப்படியாவது தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும் என்று மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அ.தி.மு.க. கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் சந்தித்தார் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்