Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் - டோனி அதிருப்தி

அக்டோபர் 11, 2020 09:32

துபாய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. துபாயில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

கேப்டன் விராட் கோலி 52 பந்தில் 90 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், சாம்கரண் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 37 ரன்னில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணிக்கு 5-வது தோல்வி ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த நெருக்கடியாகும். பெங்களூர் அணியிடம் இவ்வளவு மோசமாக இதுவரை தோற்றது கிடையாது. இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கேப்டன் டோனி கடுமையாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடைசி 4 ஓவர்களில் நாங்கள் கட்டுக்கோப்பாக சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டோம். பேட்டிங்கை பொறுத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அதை சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியமாகும். பேட்டிங்கில் மிகப் பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும்.

இந்த போட்டியில் 6-வது ஓவரில் இருந்தே பேட்டிங்கில் சக்தி இழந்து விட்டதாகவே நினைக்கிறேன். சரியான திட்டத்துடன் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கவில்லை. பந்து வீச்சில் எதிர் அணியை கட்டுப்படுத்தினோம். ஆனால் கடைசி 4 ஓவர்களில் நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. முதலில் 5 பந்து வீச்சாளர்களை வைத்து ஆடினோம். இப்போது 6 பவுலர்களை வைத்து விளையாடினோம்.

எங்களின் மிகப்பெரிய கவலை பேட்டிங்தான். அடுத்து வரும் போட்டியில் பேட்டிங்கை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்போம்.
இவ்வாறு டோனி கூறினார்.

சென்னை அணி 8-வது ஆட்டத்தில் ஐதராபாத்துடன் வருகிற 13-ந் தேதி துபாயில் மோதுகிறது. பெங்களூர் அணி 4-வது வெற்றியை 
பெற்றது. அந்த அணி அடுத்த 7-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை சந்திக்கிறது.
 

தலைப்புச்செய்திகள்