Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை பவுடர் கடத்தல்: 3 பேர் கைது

அக்டோபர் 11, 2020 10:24

திருவான்மியூர்: திருவான்மியூர் பகுதியில் MDMA என்ற போதை பவுடர் கடத்தி வந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டு 13 கிராம் MDMA போதை பவுடர், 3 செல்போன்கள்,  2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவான்மியூர், ஜெயந்தி திரையரங்கம் அருகில் கண்காணித்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். 

மேலும், சந்தேகம் அதிகரிக்கவே, அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் MDMA (Methylene Dioxy Methamphet Amine) என்ற போதை பவுடர் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், போதை பவுடரை கடத்தி வந்த ராயபுரத்தை சேர்ந்த உசேன்(36), பனையூரை சேர்ந்த மதி(35), திருவொற்றியூரை சேர்ந்த ஆசிப் ராஜா(21), ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 70,000 ரூபாய் மதிப்புள்ள 13 கிராம் எடை கொண்ட MDMA போதை பவுடர், 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், MDMA போதை பவுடர் அதிக போதை கொடுப்பதும், இந்த போதை பவுடரை 1 கிராம் அளவை நாக்கில் சுவைத்தாலோ அல்லது தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடம்பில் ஏற்றிக் கொண்டாலோ அதிக போதை ஏற்படுத்தும் என்பதும், அதிக அளவு பயன்படுத்தினால் உயிரிழக்கக் கூடிய அபாயகரமானது எனவும் தெரியவந்தது. சென்னை பெருநகர காவல்துறையினர், போதைப் பொருள் கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வரும் நிலையில், போதைப் பொருள் அல்லது கஞ்சா கடத்தி வருபவர்கள் குறித்தோ அது தொடர்பான சந்தேக நபர்கள் குறித்தோ அடையாறு போதை பொருள் தடுப்பு உதவி எண். 8754401111 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்