Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோட்டக்கலை பண்ணை செயல்பாடு: அரசு முதன்மை செயலர் நேரில் ஆய்வு

அக்டோபர் 11, 2020 10:29

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தோட்டக்கலை பண்ணை செயல்பாடு குறித்து அரசு முதன்மை செயலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்டஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம் அருகே கீரிப்பூர் வலசை கிராமத்தில் தரிசாக கிடந்த சுமார் 5 ஏக்கர் அரசு நிலத்தில் வெண்டை, காளிபிளவர், கொத்தவரங்காய் மற்றும் பந்தல் காய்கறிகள், மூலிகை செடிகள், உணவுக்காளான்கள்  மற்றும் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருமானம் ஈட்டும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட பின் ஆட்சியர் வீரராகவராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில்  மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் பயன்பாடற்ற நிலையிலுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 1,000 குறுங்காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுங்காடும் சராசரியாக 0.5 முதல் 1.5 ஏக்கர் பரப்பளவு அமைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நடப்பாண்டில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ரூ.8.75 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஒருங்கிணைந்த மாதிரி தோட்டக்கலை பண்ணை வீதம் 11 பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஊரகப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த பயன்பாடற்ற நிலையில் இருந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்தோட்டக்கலை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பண்ணையும் 3 முதல் 6 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைகளில் காய்கறிகள், மூலிகை செடிகள், பழக்கன்றுகள், காளான் வளர்ப்பு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைகளுக்கான அசோலா தீவன வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருங்கிணைத்து சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  பரிட்சார்த்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரி தோட்டக்கலை பண்ணைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இவ்வாறு ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்