Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் வெளுக்கப்போகிறது மழை

அக்டோபர் 12, 2020 12:15

சென்னை: மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நேற்று முன்தினம் மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதேபோல் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்றுமுன்தினம் காலை நிலவரப்படி) கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 9 செ.மீ. மழையும், செஙகல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய ஊர்களில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர், திருப்பத்தூர் மாவட்டம் அலங்காயம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினம் மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றிருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்பு மண்டலமாக வலுப்பெறக்கூடும். எனவே, அக்டோபர் 15ம் தேதி வரை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் அக்டோபர் 14ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்