Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் களை கட்டத் தொடங்கியது இருட்டுக்கடை அல்வா

அக்டோபர் 12, 2020 12:22

திருநெல்வேலி: கொரோனா ஊரடங்குக்கு பி்ன் தற்போது திருநெல்வேலியில் உலகப்புகழ்பெற்ற, இருட்டுக்கடை அல்வா வியாபாரம், மீண்டும் களைகட்டத் தொடங்கியது. அனைத்து நாடுகளையும், அச்சுறுத்தி கொண்டிருக்கும், கொரோனா வைரஸ் பரவலை, முற்றிலும் தடுப்பதற்காக, இந்த ஆண்டு,  மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்த ஊரடங்கு உத்தரவு,  சிறிதளவு கூட, தளர்த்தப்படாமல் நான்கு மாதங்கள் வரையிலும்,  நீடித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில்,  ஊரடங்கில் படிப்படியாக,  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை, மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே,  கடைகளை திறந்து வியாபாரம் செய்திட, அனுமதி வழங்கப்பட்டது. திருநெல்வேலியில்  அல்வாவுக்கு, உலக அளவில் புகழ்பெற்ற,  இருட்டு கடை, தினசரி மாலை 5 மணிக்கு மேல்தான் திறக்கப்படும் என்பதால்,  இந்த கடையை  திறக்க முடியாத நிலை இருந்து வந்தது. நிலைமை இவ்வாறிருக்க,  இதன் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு,  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், நோயின் விரக்தியில், ஹரிசிங், தான் சிகிச்சை பெற்று வந்த, பாளையங்கோட்டை, பெருமாள் புரத்தில் உள்ள,  தனியார் மருத்துவமனையில், திடீரென தூக்கு போட்டு,  தற்கொலை செய்து கொண்டார்.

ஹரிசிங்கின் தற்கொலையினால்,  இருட்டுக்கடையின் மீது, மக்கள் வைத்திருந்த, மதிப்பும், மரியாதையும் மங்கத் தொடங்கின. உரிமையாளரின் கொரோனா வைரஸ் தொற்றினைக் காரணம் காட்டி, மேலும் ஒரு மாத காலத்துக்கு,  இந்த கடையினை, திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், பூட்டி,   சீல் வைத்தது. அதற்கான கால அவகாசம் முடிந்தவுடன், சென்ற மாதம், அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல்,  கடை திறக்கப்பட்டு இருட்டுக்கடை அல்வா விற்பனையும், வழக்கம் போல,  நடைபெற்று வந்தது. தொடக்கத்தில், வாடிக்கையாளர்களின் கூட்டம் இல்லாமல்,  விற்பனையும் மந்தமாகவே,  இருந்து வந்தது.

தற்பொழுது,  கொரோனா ஊரடங்கு உத்தரவில்,  மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நாடெங்கிலும் இயல்பான நிலை திரும்பிவிட்டதால், இருட்டு கடை அல்வாவை வாங்குவதற்கும், மக்கள் முண்டியடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், இருட்டுக்கடையில், இப்போது, மக்கள் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக, ஆறுமாதங்கள் இடைவெளிக்குப் பிறகு,   இருட்டு கடை அல்வா மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டது. தற்பொழுது இந்த கடையை, இறந்து போன ஹரிசிங்கின் மருமகன் சூரத்சிங் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

தலைப்புச்செய்திகள்