Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வள்ளுவர் குலத்திற்கு தனி நல வாரியம்: சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

அக்டோபர் 13, 2020 08:19

கோவை: வள்ளுவர் குலத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வள்ளுவர் குல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வள்ளுவர், இனத்தின் பெயரை பிற சாதிய பெயர்களுடன் அல்லது பட்டியல் வகுப்பில் எந்த ஒரு பொது அடையாள பெயர்களுடனும் சேர்த்து அறிவிக்காமல், வள்ளுவர் என்று தனியாக அடையாளப்படுத்துதல் வேண்டும்.  வள்ளுவர் குலத்திற்கு தனி நல வாரியம், கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகள், என அனைத்தும் தனித்தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு பதிவு பெற்ற வள்ளுவர் குல சங்கங்கள், கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டமானது,  இணையதள காணொளியின் மூலமாக நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில், தமிழ்நாடு பட்டியல் இன சாதிகளின் அடிப்படையில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மற்றும், அருந்ததியர் ஜாதி பிரிவுகள் எல்லாம், தனக்கென தனிப் பெயர், மற்றும் அதற்கான அடையாள அறிவித்து செயல்படுவதால் அரசியல் அரங்கில் அந்த ஜாதிகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதாகவும், அந்த கருத்தை முன்னிறுத்தி பட்டியல் இனத்தில் மீதமுள்ள 60 சாதிகள், ஒரே ஜாதியாக ஒருங்கிணைக்கப்பட்டு,  ஆதி திராவிடர் எனும் பொதுப் பெயரில் அனைத்து பட்டியல் ஜாதியையும் ஒற்றைப் பொது அடையாளத்தை குறிக்கும் வகையில், செயல்பட்டு வருகின்றதாகவும், தமிழ்நாடு தலித் அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பொது அடையாளம் எனும் ஜாதி அரசியலை எங்கள் வள்ளுவர் சமுதாயம் கடந்த காலத்திலும் விரும்பவில்லை. இனியும் விரும்பாது. நாங்கள் அய்யன் திருவள்ளுவர் பிறந்த குலம் வழி வந்த மக்கள் நாங்கள். வள்ளுவர் என்ற சுய அடையாளத்துடன் ஜோதிடம், வானியல், ஓலைச்சுவடிகள், திருமண சடங்கு செய்தல், கோவில் அறங்காவலர்கள், பூசாரிகளாக பணி செய்தல், பாரம்பரிய மருத்துவம் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

யாரையும் பின்பற்றி வாழாமல் தனித்துவமாக வாழ்ந்து வருகிறோம்.   தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விசாரித்து, அய்யன் திருவள்ளுவர் வழிவந்த சிறுபான்மை இனமாக வள்ளுவர் குல மக்களுக்கு பாதுகாப்பும், தனி அந்தஸ்து வழங்கி கல்வி, பொருளாதாரம், போன்ற துறைகளில் முன்னேறி, மேம்பாடு அடைய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியரின் மூலமாக தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்