Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக்.25-க்கு பிறகு வடகிழக்கு பருவமழை?  சென்னை வானிலை மையம் அறிவிப்பு

அக்டோபர் 13, 2020 08:47

சென்னை: அக்டோபர் 25ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் ஆகும். தமிழகத்திற்கு பலனளிக்கக் கூடிய இந்த மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் கோடை காலத்தில் சமாளிக்க இந்த மழை உதவுகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வரும் 25ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் 22ம் தேதி வரை மேற்கு திசை காற்று வீசக் கூடிய சூழல் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16ல் தொடங்கிய நிலையில் தற்போது தாமதமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனது. இந்த ஆண்டாவது பருவமழை கைக் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது ஏரிகளில் நீர் மட்டம் அதிகமாக இருப்பதாக பொதுப் பணித் துறை கூறுகிறது. புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் அனுப்பும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் இன்னும் 4 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்தால் மட்டுமே கோடையில் நமக்கு வசந்தகாலமாக இருக்கும் என்பதே நிதர்சனம். 
 

தலைப்புச்செய்திகள்