Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள்: தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

அக்டோபர் 13, 2020 08:49

சென்னை தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடிரூபாய் முதலீட்டில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், கையெழுத்தானது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நடப்பு 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்குக் கையெழுத்திடப்பட்டுள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

காணொலிக் காட்சிகள் மூலமாக, ''தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 6,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் JSW Renewable Energy Limited நிறுவனத்தின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Mantra Data Centres நிறுவனம், சென்னைக்கு அருகில் 750 கோடி ரூபாய் முதலீட்டிலும், Aosheng Hitech Limited நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டிலும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Vans Chemistry நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டிலும் அமைய இருக்கிறது. இந்த திட்டங்களுக்கு நேரடியாக கையெழுத்திடப்பட்டன.

காணொளி காட்சி மூலம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், அப்போலோ டையர்ஸ் நிறுவனம், 505 கோடி ரூபாய் முதலீட்டிலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் Hiranandani குழுமத்தைச் சேர்ந்த Greenbase Industrial Parks நிறுவனம், 750 கோடி ரூபாய் முதலீட்டிலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த TPI Composites நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டிலும், லி எனர்ஜி நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த LS Automotive Pvt. Ltd நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில், Britannia நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டிலும் அமைய இருக்கிறது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் Inox Air Products நிறுவனம், 150 கோடி ரூபாய் முதலீட்டிலும், (கோவிட் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனை தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த நிறுவனம்), காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த Hyundai Wia நிறுவனம், 109 கோடி ரூபாய் முதலீட்டிலும், சென்னை, அம்பத்தூரில், Grinn Tech Motors & Services நிறுவனம், 90 கோடி ரூபாய் முதலீட்டிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் Counter Measures Technologies நிறுவனம், 51 கோடி ரூபாய் முதலீட்டிலும் அமைய இருக்கிறது. இந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்