Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று இரவில் உடலை எரிக்க அனுமதித்து இருப்பீர்களா? உத்திர பிரதேச போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் சூடு!

அக்டோபர் 13, 2020 09:01

அலகாபாத்: உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று இரவோடு, இரவாக உடலை எரிக்க அனுமதித்து இருப்பீர்களா? அல்லது ஒரு பணக்கார வீட்டின் பெண் இறந்து இருந்தால் இதுபோன்றுதான் இறுதிச் சடங்கு நடத்துவீர்களா?'' என்று அலகாபாத் நீதிமன்ற நீதிபதி உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் சமீபத்தில் நான்கு உயர் ஜாதி சமூகத்தைச் சேர்ந்த ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். 

இதையடுத்து இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது. இதற்கு முன்னதாக இந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்காமல் இரவோடு, இரவாக போலீசாரே தகனம் செய்தனர். இது இந்திய அளவில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இறந்த பெண்ணின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், ''நீதிபதிகள் பங்கஜ் மிதல், ரஞ்சன் ராய் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டவுடன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி. பிரசாந்த் குமாரைப் பார்த்து, உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று இரவோடு, இரவாக உடலை எரிக்க அனுமதித்து இருப்பீர்களா? அல்லது ஒரு பணக்கார வீட்டின் பெண் இறந்து இருந்தால் இதுபோன்றுதான் இறுதிச் சடங்கு நடத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்,'' என்றார்.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு மாதில கூடுதல் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.  ஹத்ராஸ் மாவட்டக் கலெக்டர், எஸ்.பி. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இறந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்து அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த வழக்கை உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கு முடியும் வரை தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணையில் ரகசியம் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஹத்ராஸ் மாவட்டக் கலெக்டர் பிரவீண் குமார் லக்ஷர் தெரிவிக்கையில், ''இரவில் உடலை எரிக்க உத்தரவு பிறப்பித்தது நான்தான். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த அவ்வாறு செய்தேன்,'' என்றார். இந்த வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு அலகாபாத் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
 

தலைப்புச்செய்திகள்