Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் பயன்படுத்திய வார்த்தைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்: சரத்பவார்

அக்டோபர் 14, 2020 04:09

மும்பை: கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் மதசார்பின்மை பற்றி எழுதி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் அனைவரும் கொரோனா தொற்றுடன் நாட்டில் போராடி வருகிறோம். இதற்கிடையே மராட்டிய கவர்னர், மாநில முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தை காண முடிந்தது. அதில் கவர்னர் மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க முதல்-மந்திரியை வலியுறுத்தி உள்ளார். மராட்டியத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரளும் அதிக வழிபாட்டு தலங்கள் உள்ளது உங்களுக்கு தெரியும். குறிப்பாக சித்தி விநாயகர், விட்டல் கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட இடங்களில் சாதாரண நாட்களில் கூட கூட்டம் அதிகளவில் இருக்கும். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம். இதன் காரணமாகவே மராட்டிய அரசு வழிபாட்டு தலங்களை திறக்காமல் உள்ளது.

கவர்னர் அவரது கருத்தை தெரிவிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கவர்னர் அவரது கருத்தை முதல்-மந்திரியிடம் பகிர்ந்து கொள்வதை நான் வரவேற்கிறேன். எனினும் கவர்னர் அவரது கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் அந்த கடிதம் ஊடகங்களில் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கவர்னர், முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதம் ஒரு அரசியல் கட்சி தலைவர் எழுதியது போல உள்ளது. ஜனநாயகத்தில் முதல்-மந்திரி, கவர்னர் இடையே கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். எனினும் ஒருவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அவர் வகித்து வரும் அரசியல் அமைப்பின் பதவிக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரியின் முடிவுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். இந்த பிரச்சினை பற்றி நான் கவர்னரிடமோ, முதல்-மந்திரியிடமோ பேசவில்லை. எனினும் எனது வலியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்