Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ2,000: தமிழக அரசு தீபாவளி பரிசு தர ஆலோசனை 

அக்டோபர் 14, 2020 08:13

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்களுடன்,  ரூ.1,000 ரொக்கப் பரிசையும் தமிழக அரசு ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

இந்நிலையில். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அத்துடன், கொரோனாவை காரணங்காட்டி பொங்கல் பண்டிக்கைக்கு அளித்த 1,000 ரூபாய்க்கு பதிலாக கூடுதல் தொகை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், மே மாதம் இறுதிவரை முழுபொதுமுடக்கமும், அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடனும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 

ஆனால், ஏப்ரலில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியதுடன் சரி. அதன்பின் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்குவதாக, தமிழக முதல்வர்  மாதந்தோறும் அறிவித்து வருகிறார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கசிந்துள்ள தகவல், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்