Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹத்ராஸ் பெண்ணின் குடுப்பத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு: உபி அரசு அறிக்கை

அக்டோபர் 15, 2020 04:55

புதுடெல்லி, : ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில், உத்திரப்பிரதேச மாநில அரசு தரப்பில் நேற்று பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இது உத்தரப்பிரதேச அரசு மற்றும் காவல்துறையினர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு வைக்கப்பட்டது.

இதில் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்ற உத்தரவில்,' இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றனர். அதில் ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளதா, மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் தரப்பில் வழக்கு வாதங்களை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா, தற்போது வரை இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ஆகியவை குறித்த முழு விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்திரப்பிரதேச அரசுக்கு கடந்த 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஹத்ராஸ் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ சம்பவ இடத்திற்கு சென்று அதுதொடர்பாக விசாரணை நடத்தி தற்போது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக உத்திரப்பிரதேச அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய பதில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,' இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. இதேப்போன்று தான் வழக்கு தொடர்பான சாட்சியங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விவகாரத்தில் மாநில அரசிடம் அதுசார்ந்த நிலை அறிக்கையை பெற சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வரும் போது உபி அரசின் பதில் மனு தொடர்பான கோரிக்கை குறித்து நீதிமன்றம் ஆய்வு மேற்கொள்ளும் என தெரியவருகிறது.

தலைப்புச்செய்திகள்