Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 40 லட்சம் ரொக்கப்பணம் தப்பியது

அக்டோபர் 15, 2020 06:56

ஆவடி: ஆவடி ரயில்வே கேட் அருகில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஒருவர் ஈடுபட்ட நிலையில் நீண்ட நேரம் போராடியும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.40 லட்சம் ரொக்கப்பணம் தப்பியது. ஆவடி ரயில்வே கேட் அருகில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பணம் எடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்த மையத்தில் இருந்த இயந்திரங்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஆவடியில் உள்ள இந்தியன் வங்கி கிளை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், அவர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள கேமராவில் இருந்து அலாரத்துக்கு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், 11ம் தேதி இரவு 10.45மணிக்கு மர்ம நபர் உள்ளே புகுந்து இரு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்காணிப்பு கேமரா பதிவில் தெரியவந்தது. இதனை அடுத்து, இந்த மையத்தில் உள்ள இரு இயந்திரங்களில் இருந்து சுமார் ரூ. 40 லட்சம் ரொக்கப்பணம் தப்பியது.

இது குறித்து வங்கி அதிகாரி காயத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான  உருவத்தை வைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். ரயில் போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இருள் சூழ்ந்து இருப்பதை சாதகமாக்கிக் கொண்ட கொள்ளையன் சாவகாசமாக ஈடுபட்ட கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்