Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் கடத்தல் தடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர்? மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 15, 2020 07:03

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி மணல் திருட்டை தடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோரை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பாக சி.சி.டி.வி. கேமராக்களை கையில் வைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை கண்டித்து சி.சி.டி.வி. கேமராக்களை கையில் ஏந்தியபடி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மண் குவாரிகளில் மணல் எடுக்கப்படுவதாகவும் சி.சி.டி.வி. கேமரா மற்றும் ட்ரோன்கேமரா உதவியுடன் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சட்டவிரோத மணல் விற்பனை நிலையங்களை மூடவேண்டும். கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட இடங்களில் மணல் கடத்தலை தடுக்க சோதனைச் சாவடிகளை அமைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

தாசில்தார் மணிகண்டன் ஒத்துழைப்போடு செங்குன்றம் பகுதியில் செம்புலியாவரம் பஞ்சாயத்து பகுதியில் மட்டும் 50.000 டன் மணல் குவித்து வைத்து அமோக வியாபாரம் நடைபெறுகிறது. அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு வரும் மணல் என்றும் இதனை தடுக்க முடியாமல் மணல் கடத்தலுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்