Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க. பொருளாளர் கொரோனாவுக்கு பலி: அரைக்கம்பத்தில் கட்சிக்கொடி பறக்கும்-டி.டி.வி

அக்டோபர் 16, 2020 08:59

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் அ.ம.மு.க. பொருளாளருமான வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி காலமானார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.ம.மு.க.வின் பொருளாளருமான வெற்றிவேலுக்கு (வயது 60). சளி, காய்ச்சல் தொல்லை இருந்து வந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவரது  உடல் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளின் படி சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது உடல் நேற்று இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு ஓட்டேரி மைதானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்ததாவது:
துரோகத்திற்கு எதிராக என்னுடன் இணைந்து போராடியவர். அவர் இழந்தது குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. எதையும் பரீச்சென பேசக்குடியவர். என்னால் அவர் இறந்ததை நம்பமுடியவில்லை. அவர் மறைவை முன்னிட்டு கட்சி நிகழ்ச்சிகள் ஒருவாரம் ரத்து செய்யப்படுகிறது. அவர் மறைவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வெற்றிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்