Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானுக்கு தீபாவளி

மார்ச் 25, 2019 05:54

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் தவறுதலாக காங்., வெற்றி பெற்று விட்டால் பாக்., அதை தீபாளியாக கொண்டாடும் என குஜராத் பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் மெஹ்சானா பகுதியில் பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து பேசிய அவர், இது நடக்க போவதில்லை. இருந்தாலும் ஒருவேளை மே 23 ம் தேதி வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகளில் தவறுதலாக காங்., வெற்றி பெற்று விட்டால், பாக்., அதனை தீபாவளியாக கொண்டாடும். ஏனெனில் காங்., அவர்களுக்கு நெருக்கமானவர்கள். மே 23 ல் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போது தான் அது பாக்.,க்கு துக்கத்தையும், பயத்தை ஏற்படுத்தும். 

பயங்கரவாதிகளுக்கு பாக்., புகழிடம் அளித்து வருவதை உலகமே அறியும். ஆனால் ராகுலின் ஆலோசகர் சாம் பிட்ரோடா, புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பாக்.,ஐ சேர்ந்த 57 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டுவது தவறு என்கிறார். காங்., தலைவர்கள், பாக்.,ன் குரலாகவே பேசி வருகின்றனர். நமது ராணுவத்தினரின் செயல்பாடுகளை சந்தேகிக்க இவர்கள் யார்? முந்தைய காங்., அரசு தான் தங்கள் ஆட்சியின் போது பல பயங்கரவாதிகளை விடுதலை செய்தனர். 

காங்., ஓட்டு வங்கி அரசியலுக்காக பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்தது. மோடியும், அமித்ஷாவும் குஜராத்தின் மகன்கள். உலக அரங்கில் இந்தியாவை உச்சிக்கு கொண்டு செல்ல உழைத்து வருகின்றனர். மோடியை தோற்கடிக்கவே எதிர்கட்சிகள் அனைத்து ஒன்று சேர்ந்துள்ளன. ராம ராஜ்ய பாதையில் நாட்டை வழிநடத்தும் மோடிக்கு எதிராக காங்., இடதுசாரிகள், பயங்கரவாதிகள், நக்சல்கள், ஊழல்வாதிகள், மம்தா, மாயாவதி, அகிலேஷ், சந்திரபாபு உள்ளிட்ட சுயநலவாதிகள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களின் போக்கிற்கு முடிவு கட்டுவதற்கான தேர்தல் இது. மக்கள் தங்களின் ஓட்டுக்கள் மூலம் வரலாறு படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைப்புச்செய்திகள்