Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓட தொடங்கின- பயணிகள் மகிழ்ச்சி

அக்டோபர் 16, 2020 11:14

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் பஸ்-ரெயில் உள்பட பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. கொரோனா வீரியம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை வழக்கம் போலவே தொடங்கப்பட்டது. அதேவேளை ஓரளவு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வர முடிகிறது. என்னதான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தன. ஊரடங்கு காலகட்டத்துக்குட்பட்ட சாலைவரியை ரத்து செய்தால்தான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சாலைவரி ரத்து செய்வது குறித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16-ந்தேதி (இன்று) முதல் ஆம்னி பஸ்கள் இயக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆம்னி பஸ்களில் தூய்மைப்பணி மும்முரமாக நடந்தது. சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ்கள் வளாகத்தில் உள்ள பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு, சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. பஸ்களின் ஜன்னல் திரை, இருக்கை துணிகள் அகற்றப்பட்டன. நேற்று மாலை முதலே பஸ்கள் புறப்பட தயாராகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது குறித்த தகவலால் பயணிகள் நேற்று முன்தினமே ஆன்-லைன் மூலம் வழக்கம்போலவே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கினர். பலர் நேரடியாக வந்தும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் பெற்று செல்வதை பார்க்க முடிந்தது.

இன்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பஸ்கள் இயங்க தொடங்கின. கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பஸ்கள் புறப்பட தொடங்கியதால் பஸ் உரிமையாளர்களும், தொழிலாளர்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் ஆம்னி பஸ்களை டிரைவர்கள் இயக்கினர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், “ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத சாலைவரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும். பயணிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தற்போதைய சூழலில் முதற்கட்டமாக 500 பஸ்களை இயக்குவது என்றும், பஸ்களில் 60 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது”, என்றார்.

தலைப்புச்செய்திகள்