Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நடப்பது சூரப்பா ஆட்சியா? இ.கம்யூ. தலைவர் முத்தரசன் ஆவேசம்

அக்டோபர் 17, 2020 06:43

சிவகங்கை: தமிழகத்தில் நடப்பது சூரப்பா ஆட்சியா?, தன்னிச்சையாக செயல்படும் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,''  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழக அரசை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.  சிவகங்கையில் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்து சூரத்தனமாக தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செயல்படும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது.

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி.க்கு 50   சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது மத்திய அரசு. இது மன்னிக்க முடியாத துரோகம். சமூக நீதிக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரும் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை. தமிழகத்தில் அமைச்சரவை தீர்மானம் எதனையுமே ஆளுநர் ஏற்பதே இல்லை.

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது. சட்டசபை தேர்தலில் கொள்கை ரீதியாக தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். இந்த கூட்டணியை குலைக்க சில ஊடகங்கள் முயற்சித்து வருகின்றன. சங்ககால சிறப்புடைய பிரான்மலையை தனியாருக்கு பட்டா கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். 

தலைப்புச்செய்திகள்