Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேலும் ஒரு பீகார் அமைச்சர் மரணம்: கொரோனாவுக்கு பலியான 20வது மக்கள் பிரதிநிதி 

அக்டோபர் 17, 2020 06:47

பாட்னா: பீகாரில் கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 20 மக்கள் பிரதிநிதிகள் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் சற்றே ஓய்ந்திருந்த கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,30,635. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,13,032 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் அமைச்சர் கபில்தேவ் காமத் (வயது 70) கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த 1ம் தேதி முதல் பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கபில்தேவ் காமத் மரணம் அடைந்துள்ளார். ஏற்கனவே பீகாரில் வினோத்குமார் சிங் கடந்த 12ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 20 மக்கள் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முதன் முதலில் கொரோனாவுக்கு பலியானவர். மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடியையும் கொரோனா காவு கொண்டது. பீகார், உ.பி.யில் தலா 2 அமைச்சர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஜார்க்கண்ட், நாகாலாந்தில் மொத்தம் 2 அமைச்சர்கள் மரணம் அடைந்துள்ளனர். 

தமிழகத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் மரணம் அடைந்தார். இதுவரை மரணம் அடைந்த 20 மக்கள் பிரதிநிதிகளில் 14 பேர் கொரோனா பாதித்த நிலையிலும் 6 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்பும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்