Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம்

மார்ச் 25, 2019 06:21

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டசபை தொகுதிகளில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு செல்வாக்கு அதிகம். இதே நிலைமை தான், அவர் போட்டியிட்டு வென்ற, சாத்துார் தொகுதியிலும் உள்ளது. அதே நேரத்தில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இந்த இருவரின் செல்வாக்கை பயன்படுத்தியே, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என, தே.மு.தி.க., கணக்கு போட்டது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, இதுவரை எந்த குழப்பமும் நடைபெறவில்லை. அவர், தே.மு.தி.க., வேட்பாளரை சந்தித்து, ஓட்டு சேகரிக்கும் பணியிலும் இறங்கி விட்டார். ஆனால், அமைச்சர் உதயகுமார், தே.மு.தி.க., வேட்பாளரிடம், 'நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம்' என்ற, வாக்குறுதியை மட்டும் அளித்து விட்டு, தேனி தொகுதியில் போட்டியிடும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன், ரவீந்திரநாத்துக்கு ஓட்டு சேகரிக்க, சோழவந்தான் சென்று விட்டார். அடுத்து அவரது நிகழ்ச்சியில், உசிலம்பட்டி பெரிய அளவில் இடம் பிடித்து உள்ளது. இதனால், தே.மு.தி.க., வினர் கலக்கத்தில் உள்ளனர். 

அவர்கள் கூறுகையில், 'எந்த நேரமும், தன் சட்டசபை தொகுதியான, திருமங்கலத்தையே சுற்றி வந்த உதயகுமார், 20 நாட்களாக தொகுதி பக்கமே வரவில்லை. 'தற்போதும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதியில், ரவீந்திரநாத்துக்கு ஓட்டு சேகரிக்கிறார்' என, அதிருப்தி தெரிவித்தனர். 

அமைச்சர் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, 'ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைப்பதில், அமைச்சர் அதிக ஆர்வம் காட்டுவது உண்மை தான். 'ஆனால், தன் சொந்த தொகுதியில் போட்டியிடும், கூட்டணி கட்சி வேட்பாளரை கை விட மாட்டார். கட்சி நிர்வாகிகள் மூலம் பூர்வாங்க வேலைகளை செய்து வருகிறார்' என்றனர்.

தலைப்புச்செய்திகள்