Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்: பினாங்கு துணை முதல்வர் ராமசாமி 

அக்டோபர் 19, 2020 09:35

பினாங்கு: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்,''  என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர்.முனைவர் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் வளர்ந்தவர் முத்தையா முரளிதரன்.

ஆனால், தொடக்கம் முதலே தமிழர் பிரச்சனையின் பக்கம் முத்தையா முரளிதரன் நிற்கவில்லை. தன்னை பெரும்பான்மை சிங்களருடன் இணைத்துக் கொண்டவராக அடையாளப்படுத்தினார். சிங்கள தலைவர்களுடன் தோளோடு தோள் நின்றார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளராக தம்மை வெளிப்படுத்தியவர் முத்தையா முரளிதரன். இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு இந்த மகிந்த ராஜபக்சேதான் முழு பொறுப்பானவர். கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஒட்டுமொத்த தமிழினமே கதறியழுது கண்ணீர்சிந்திய போது தம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான ஆண்டு என்று கொண்டாடி மகிழ்ந்தவர் இந்த முத்தையா முரளிதரன். முத்தையா முரளிதரன் மிக சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம்.. ஆனால் தம்முடைய இனத்தின் வேரை மறந்து, தமிழ் தேசத்தை சிங்களம் ஆக்கிரமித்ததை கொண்டாடினார்.

இலங்கையில் யுத்த காலத்தில் அப்பாவி பெண்கள் உள்ளிட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருபோதும் முத்தையா முரளிதரன் வாயே திறந்தது இல்லை. தம்முடைய சொந்த இனத்தில் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டவராகவே இருந்தார் முத்தையா முரளிதரன். முரளிதரன் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்த தவறிய மனிதர். ஆகையால், முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பது என்பது ஈழத்தமிழர்களை அவமதிப்பதாகும். இதை நடிகர் விஜய்சேதுபதி உணர வேண்டும். இவ்வாறு பேராசிரியர் ராமசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.  
 

தலைப்புச்செய்திகள்