Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரியங்கா 27-ந்தேதி அயோத்தியில் பிரசாரம்

மார்ச் 25, 2019 08:53

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி தேடி தர அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். 

கடந்த வாரம் 3 நாட்கள் அவர் கங்கையில் படகு பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை நடத்தினார். கங்கை கரையோர மக்களை அவர் வெகுவாக கவர்ந்தார். 

அடுத்த கட்டமாக அவர் பஸ் பயண பிரசாரத்தை நடத்த உள்ளார். பிறகு ரெயில் பயண பிரசாரத்துக்கும் பிரியங்கா திட்டமிட்டு இருக்கிறார். 

பிரியங்காவின் அடுத்த கட்ட பிரசார பயணம் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி பகுதியில் நாளை மறுநாள் (27-ந்தேதி) அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தில் ராமர் கோவில் விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக உள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் பிரசாரம் அந்த பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

சமீப காலமாக ராகுலும், பிரியங்காவும் எந்த ஊருக்கு பிரசாரத்துக்கு சென்றாலும் அங்குள்ள இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பிரியங்கா சமீபத்தில் குஜராத்துக்கு சென்றிருந்தபோதும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டார். 

அதே பாணியில் அவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரியங்கா செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்